

முன்னணி நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதால், நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில், முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் உள்பட 12 பேரின் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், 8 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும், திலீப்பிற்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளின்படி அவரது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கடந்த டிச.8 ஆம் தேதி நடிகர் திலிப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோரை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், நடிகர் திலீப்பின் புதிய படத்தின் நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் எனவும், அதற்காக நீதிமன்ற காவலில் உள்ள அவரது கடவுச்சீட்டைத் திருப்பி வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த மனுவின் மீதான விசாரணையை ஏற்றுக்கொண்ட எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம், நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை அவரிடம் ஒப்படைக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட அன்றே அவரது கடவுச்சீட்டை உடனடியாகத் திருப்பி தருமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யப்படக்கூடும் என்பதால் அவரது கடவுச்சீட்டைத் திருப்பி அளிக்கக்கூடாது என எதிர் தரப்பினர் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.