

மத்திய பாஜக அரசின் 'வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா(விபி - ஜி ராம் ஜி)' கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறது என்றும் திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்றும் வகையில் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. அதேநேரத்தில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதி அளித்து வந்த நிலையில் இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.
தொடர்ந்து இன்று மக்களவையில் கடும் அமளிக்கு இடையே ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா (விபி - ஜி ராம் ஜி) இன்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த புதிய சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி தில்லியில் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
"இந்த புதிய சட்ட மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது. மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிப்பது போன்றதாகும்.
இந்த மசோதா, தேவை அடிப்படையிலான மசோதாவாகக் கொண்டு வரப்பட்டது, ஆனால் இன்று பாஜகவினர் ஒதுக்கீடு அடிப்படையிலான மசோதாவாக மாற்றிவிட்டனர். மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதா, இல்லையா? எந்த மாவட்டத்திற்கு அல்லது எந்த மாநிலத்திற்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதை எல்லாம் இனி அரசே முடிவு செய்யும். இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது" என்று கூறினார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை சிதைத்து, பல கோடி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய பாஜக அரசின் புதிய சட்ட மசோதாவை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று நாடாளுமன்றத்தில் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.