

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரத்தில், பிகார் முதல்வருக்கு ஆதரவாக, அவர் ஒரு தவறும் செய்யவில்லை என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிகார் தலைமைச் செயலகத்தில், திங்கள்கிழமை (டிச. 15) நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலுக்கட்டாயமாக விலக்கியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக நாட்டின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நிதீஷ் குமாருக்கு ஆதரவாகப் பல்வேறு பாஜக தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தால், அந்தப் பெண் மருத்துவர் அவருக்கு வழங்கப்பட்ட பணியை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான கிரிராஜ் சிங்கிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்தப் பணியை ஏற்பதோ அல்லது நரகத்துக்குச் செல்வதோ அது அந்தப் பெண்ணின் முடிவு எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“பணி நியமன ஆணை பெறுவதற்கு ஒருவர் சென்றால், அவர் தனது முகத்தைக் காட்டவேண்டும் அல்லவா? இது என்ன இஸ்லாமிய நாடா? நிதீஷ் குமார் ஒரு பாதுகாவலராகச் செயல்பட்டுள்ளார்.
நீங்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கோ அல்லது விமான நிலையம் சென்றாலோ முகத்தைக் காண்பிக்கமாட்டீர்களா? மக்கள் பாகிஸ்தான், இங்கிலீஷ்தான் குறித்து பேசுகின்றனர். ஆனால், இது இந்தியா. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றது” எனப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், அந்தப் பெண் மருத்துவர் அவரது பணி நியமனத்தை மறுத்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அந்தப் பெண் அவரது பணியை நிராகரிக்கின்றாரோ அல்லது நரகத்துக்குச் செல்கின்றாரோ அது அவருடைய முடிவு” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசிய கருத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 5,000 அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.