

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: வங்கதேசத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் துணைத் தூதரின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் நேற்று நள்ளிரவு கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்தாண்டு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் இயக்கத்தின் தலைவரான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி மீது கடந்த வாரம் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கடந்த ஒரு வாரமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் ஹாடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹாடிக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய மாணவர்கள் இயக்கத்தின் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கதேசத்தின் மிகப்பெரிய நாளிதழ்களான புரோதோம் அலோ மற்றும் டெய்லி ஸ்டார் ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.
நள்ளிரவு 11 மணியளவில் சட்டோகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். கண்ணீர் புகைக்குண்டு வீசி அவர்களை கலைக்க முயற்சித்த நிலையில், தூதரக அலுவலகத்தின் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து, இந்திய துணைத் தூதரின் வீட்டின் மீதும் சிலர் கல்வீசித் தாக்கியதுடன், இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், வங்கதேசத்தில் உள்ள அவாமி லீக்கிற்கு சொந்தமான இடங்களை போராட்டக்காரர்கள் தாக்கி வருகின்றனர்.
இதனால், வங்கதேசத்தில் வாழ் இந்தியர்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
கடந்தாண்டு வங்கதேச அரசுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் இயக்கத்தின் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, அந்நாட்டைவிட்டு வெளியேறிய இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.