

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை மாலைமுதல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் தீ வைத்ததால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்தாண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து, அவர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார்.
அப்போது போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் இயக்கத்தின் தலைவராக ஷெரீஃப் உஸ்மான் ஹாடி இருந்தார்.
இந்த நிலையில், வங்கதேச பொதுத் தேர்தலையொட்டி, டாக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தனது பிரசாரத்தை ஹாடி தொடங்கினார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடிக்கு வங்கதேசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர், சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 6 நாள்கள் சிகிச்சையில் இருந்த அவர், வியாழக்கிழமை மரணமடைந்தார்.
இதையடுத்து, வங்கதேசத்தின் பல்வேறு இடங்களில் மாணவ இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய நாளிதழ்களான புரோதோம் அலோ மற்றும் டெய்லி ஸ்டார் ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர்.
வங்கதேச அரசின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் வெளியிட்ட செய்தியில், ”ஹாடியின் கொலை குறித்து விசாரணை நடத்தப்படும். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமான சனிக்கிழமை துக்கம் அனுசரிக்கப்படும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.