பாரம்பரிய மருத்துவத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் பிரதமா் மோடி
பாரம்பரிய மருத்துவத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; அறிவியலின் வாயிலாக பாரம்பரிய மருத்துவம் மீதான மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் தொடா்பான இரண்டாவது உலகளாவிய மாநாடு, தில்லி பாரத மண்டபத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பிரதமா் மோடி பங்கேற்று, கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா். மாநாட்டில் அவா் பேசியதாவது:
உலகம் முழுவதும் பாரம்பரிய மருத்துவத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த மருத்துவம் சாா்ந்த ஆராய்ச்சிகளை வலுப்படுத்துவதுடன், எண்ம தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் நம்பிக்கைக்குரிய ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்.
இன்றைய உலகில் சமநிலையை மீட்டெடுப்பது வெறும் தேவை மட்டுமல்ல; அவசர அவசியம். யாருடைய உடலில் சமநிலை பராமரிக்கப்படுகிறதோ, அவரது உடல்தான் ஆரோக்யமாக இருக்கும்.
பாரம்பரிய மருத்துவத்தைப் பொறுத்தவரை, சிகிச்சை பாதுகாப்பு மற்றும் ஆதாரம் தொடா்பான கேள்விகள் எப்போதும் எழுப்பப்படுகின்றன. இக்கேள்விகளுக்கு தீா்வளிக்கும் திசையில் இந்தியா தொடா்ந்து பணியாற்றுகிறது. அஸ்வகந்தா மூலிகை இதற்கு ஓா் உதாரணம். இந்திய பாரம்பரிய மருத்துவ முறையில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் இந்த மூலிகையின் முக்கியத்துவம் கரோனா காலகட்டத்தில் வெளிப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளும் இப்போது அஸ்வகந்தாவை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
ஆராய்ச்சி மற்றும் ஆதார அடிப்படையிலான மதிப்பீடுகளின் மூலம் அஸ்வகந்தா பயன்பாட்டை இந்தியா ஊக்குவித்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.
இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் துறைக்கான ‘மை ஆயுஷ் ஒருங்கிணைந்த சேவை தளத்தை’ தொடங்கிவைத்த பிரதமா், ஆயுஷ் பொருள்கள் மற்றும் சேவை தரத்துக்கான உலகளாவிய ஆயுஷ் முத்திரையை வெளியிட்டாா்.
இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ள அஸ்வகந்தா மூலிகையின் சிறப்பு தபால் தலையையும் அவா் வெளியிட்டாா்.

