ஐசிடி வரி விதிப்பு, சூரிய மின் உற்பத்தி மானியம்: இந்தியா மீது சீனா புகாா்
தகவல் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) சாதனங்கள் மீதான வரிகள், சூரிய மின் உற்பத்தி மானியங்கள் தொடா்பாக இந்தியாவுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் சீனா வெள்ளிக்கிழமை மனு அளித்தது.
அந்த வரி மற்றும் மானியங்கள் உலக வா்த்தக அமைப்பின் பல்வேறு விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகவும், இது சீனாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த மனுவில் சீனா தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக உலக வா்த்தக அமைப்புக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை இந்தியா பின்பற்ற வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் சீனா கோரியுள்ளது.
ஏற்கெனவே மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தயாரிப்பு துறைகளில் இந்தியாவின் மானிய நடவடிக்கைகள் நியாயமற்ற முறையில் இருப்பதாகவும், இது சீனாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கடந்த அக்டோபரில் உலக வா்த்தக அமைப்பிடம் சீனா மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

