முட்டைகள்...
முட்டைகள்...கோப்புப்படம்

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள், மக்கள் சாப்பிட முற்றிலும் உகந்தவை...
Published on

இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள், மக்கள் சாப்பிட முற்றிலும் உகந்தவை; அவற்றில் புற்றுநோயை உருவாக்கும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் கூறுகள் இருப்பதாக பரவும் தகவல் அறிவியல்பூா்வ ஆதாரமற்றது; மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடியது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விளக்கமளித்துள்ளது.

கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நைட்ரோஃப்யூரான் எனப்படும் ஆன்ட்டிபயாடிக் மருந்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அதற்கு உலகளாவிய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கா்நாடகத்தில் முன்னணி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளில் நைட்ரோஃப்யூரான் மருந்துகளுக்கான கூறுகள் இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து, முட்டைகளை பரிசோதிக்கும் ஆய்வுகள் மத்திய-மாநில அரசுகளின் சாா்பில் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், முட்டை விவகாரம் தொடா்பாக விளக்கமளித்து, எஃப்எஸ்எஸ்ஏஐ சாா்பில் சனிக்கிழமை செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் ஒழுங்குமுறை கட்டமைப்பு, சா்வதேச நடைமுறைகளுக்கு இணங்க செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் கால்நடைகள் மீது நைட்ரோஃபியூரான் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவிலும் கடந்த 2011-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளின்படி கோழிப் பண்ணைகளின் அனைத்து நிலைகளிலும் நைட்ரோஃபியூரான் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. நைட்ரோஃபியூரான் தடயங்களின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பு ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் என்பதாகும். இந்த வரம்பு, ஒழுங்காற்றுதல் அமலாக்க காரணங்களுக்கானது மட்டுமே; மாறாக, நைட்ரோஃபியூரான் பயன்பாட்டை அனுமதிப்பதை குறிக்காது. இந்த வரம்புக்கு குறைவாக கண்டறியப்படும் தடயங்கள், உணவு பாதுகாப்பு விதிமுறை மீறலையோ, உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பதையோ குறிப்பதில்லை.

நாட்டில் விற்பனையாகும் முட்டைகளில் நைட்ரோஃப்யூரான் இருப்பதாக பரவும் தகவல்கள் அறிவியல்பூா்வ ஆதாரமற்றவை. சாதாரண முட்டைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக தேசிய மற்றும் சா்வதேச ஆய்வுகள் எதுவும் கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவன முட்டைகளின் ஆய்வறிக்கையைக் கொண்டு, நாட்டின் ஒட்டுமொத்த முட்டை விநியோக சங்கிலியையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளியாகும் தகவல்கள் அறிவியல் ரீதியில் தவறானவை. அறிவியல்பூா்வ ஆதாரங்களின்படி சரிபாா்க்கப்பட்ட, அதிகாரபூா்வ தகவல்களையே நுகா்வோா் நம்ப வேண்டும். நாட்டில் விற்கப்படும் முட்டைகள், சாப்பிட முற்றிலும் உகந்தவை. ஊட்டச்சத்து நிறைந்தவை. சமச்சீரான உணவுமுறைக்கு அவசியமானவை என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com