இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

ஜார்கண்ட் மருத்துவமனையில் பட்டியலினத்தவருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாததால், இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்
இறந்த 4 மாதக் குழந்தையை பையில் எடுத்துச் செல்லும் டிம்பா குடும்பத்தினர்
இறந்த 4 மாதக் குழந்தையை பையில் எடுத்துச் செல்லும் டிம்பா குடும்பத்தினர்ENS
Updated on
1 min read

ஜார்கண்டில் மருத்துவமனையில் பட்டியலினத்தவருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படாததால், இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் நோமுண்டி தொகுதியில் உள்ள பால்ஜோரி கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த டிம்பா சதோம்பா என்பவரின் 4 மாதக் குழந்தைக்கு சுவாசப் பிரச்னை தொடர்பாக சைபாஸாவில் உள்ள சதார் மருத்துவமனையில் வியாழக்கிழமை (டிச.18) அனுமதித்திருந்தார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி, வெள்ளிக்கிழமையில் (டிச.19) குழந்தை உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு, மருத்துவமனை நிர்வாகத்திடம் டிம்பாவின் குடும்பத்தினர் கோரினர்.

இதனைத் தொடர்ந்து, டிம்பாவை காத்திருக்கச் சொன்ன மருத்துவமனை நிர்வாகம், ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியது. இருப்பினும், மணிக்கணக்காக வெகுநேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படாததால், டிம்பாவின் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பினர்.

இந்த நிலையில், டிம்பாவிடம் வெறும் ரூ. 100 மட்டுமே இருந்ததால், அதைவைத்தே ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனை அருகேயிருந்த கடையில் ரூ. 20-க்கு பை ஒன்றை வாங்கி, இறந்த குழந்தையின் உடலைப் பையினுள் வைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

தொடர்ந்து, சைபாஸாவில் இருந்து நோமுண்டி பேருந்தில் சென்று, அங்கிருந்து பால்ஜோரி கிராமத்துக்கு இறந்த குழந்தையுடன் நடந்து செல்ல வேண்டியிருந்தது. தங்களின் குழந்தைக்காக எந்த மாற்று ஏற்பாட்டையும் செய்யவில்லை என்றும், தங்களின் மீது அக்கறை எதுவும் காட்டவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது டிம்பாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவம் குறித்து, மருத்துவமனை கூறுகையில், டிம்பா ஆம்புலன்ஸ் கோரிய சமயத்தில் வேறொரு இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டதாகவும், வரும்வரையில் காத்திருக்கச் சொன்னதாகவும் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, குழந்தையின் உடல்நிலை மோசமானதால், மேம்பட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும், அதற்கு டிம்பா மறுத்ததாகவும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் இர்பான் அன்சாரி உறுதியளித்தார்.

இதையும் படிக்க: வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

Summary

Jharkhand tribal family carries infant's body in plastic bag as hospital fails to provide transport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com