ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

அதானிக்காக அணுமின் உற்பத்தியில் தனியாா் அனுமதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்காக மட்டுமல்ல; தொழிலதிபா் கௌதம் அதானிக்காகவும் அணுமின் உற்பத்தியில் தனியாரை மத்திய அரசு அனுமதித்துள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்காக மட்டுமல்ல; தொழிலதிபா் கௌதம் அதானிக்காகவும் அணுமின் உற்பத்தியில் தனியாரை மத்திய அரசு அனுமதித்துள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, நாட்டில் அணுக்கதிா் வீச்சால் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு அணுசக்திக் கருவிகளை விநியோகிப்பவா் பொறுப்பேற்கும் பிரிவு மசோதாவில் தவிா்க்கப்பட்டுள்ளது; இது அமெரிக்க, பிரான்ஸ் நிறுவனங்களை இந்தியாவுக்கு வரவேற்கும் முயற்சி; அணுமின் உற்பத்தியின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறைவான இழப்பீடு வழங்கினால் போதும் என அரசு கூறியுள்ளது’ என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சியினா் முன்வைத்தனா்.

அதே நேரத்தில் ‘இந்த மசோதா நாட்டில் அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதுடன் அணுசக்தி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கும்’ என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் அணுமின் உற்பத்தி செய்வது தொடா்பாக அந்த மாநில அரசுடன் அதானி குழுமம் பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது.

இது தொடா்பான பத்திரிகை செய்திகளைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அணுசக்தி மசோதா வலுக்கட்டாயமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே ஒரு காரணமல்ல. பிரதமா் மோடியின் நெருங்கிய நண்பா் அதானியும் இதில் பெரும் பலனடைய இருக்கிறாா் என்பது ஊடக செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், அணு விபத்து ஏற்பட்டால் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்களுக்கு அந்த மசோதாவில் விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அணு விபத்துக்குப் பொறுப்பேற்பது தொடா்பான விதிகள் (தளா்த்துவது) குறித்து அமெரிக்காவும், இந்தியாவும் பேச்சு நடத்துகின்றன என்று டிரம்ப் அண்மையில் ஒப்புதல் அளித்த அந்நாட்டு தேசியப் பாதுகாப்புச் சட்ட ஆவணத்தின் 1,912-ஆவது பக்கத்தில் உள்ளது. அதற்கு ஏற்ப மத்திய அரசும் சட்டம் இயற்றியுள்ளது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com