

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தேர்தல் அறக்கட்டளைகளை உருவாக்கி ரூ.6,088 கோடி நன்கொடையாக திரட்டி பாஜக முதலிடம் பிடித்துள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்குப் பின், மாற்று வழிகளைப் பின்பற்றிய பாஜகவின் தேர்தல் நன்கொடை வசூல் 50% க்கும் மேலாக அதிகரித்து ரூ.6,088 கோடியாக உள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது, மத்தியில் ஆளும் பாஜகவின் தேர்தல் நிதி வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்தல் நன்கொடை 2024 - 25ஆம் ஆண்டில் நன்கொடை அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2024 - 25ஆம் ஆண்டில், வெளியில் இருந்து பாஜக வசூலித்த தேர்தல் நிதி ரூ.6,088 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023 - 24ஆம் ஆண்டில் வசூலித்த ரூ.3,967 கோடியைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகம்.
பாஜகவால் தயாரிக்கப்பட்ட இந்த நிதி அறிக்கை, டிச. 8ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, இதே ஆண்டில் காங்கிரஸ் வசூலித்த ரூ.522 கோடியைக் காட்டிலும் பாஜக வசூலித்த தொகை 12 மடங்கு அதிகம். காங்கிரஸ் மட்டுமல்ல, அதன் ஒட்டுமொத்த கூட்டணியில் உள்ள 12 கட்சிகளின் தேர்தல் நிதியே ஒட்டுமொத்தமாக வெறும் ரூ.1,343 கோடிதான். இந்த தொகையுடன் ஒப்பிட்டால் கூட, பாஜக 4.5 மடங்கு அதிக நிதியை வசூலித்திருக்கிறது.
அதாவது பாஜக வெளியிட்டிருக்கும் 162 பக்க அறிக்கையில், தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.3,744 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தனிப்பட்ட நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து ரு.2,344 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறக்கட்டளை தவிர்த்து, நன்கொடை அதிகம் அளித்தவர்களின் முதல் 30 இடத்தில் பெரு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, இந்தியா சீரம் தனியார் நிறுவனம் (ரூ.100 கோடி), ரங்டா சன்ஸ் தனியார் நிறுவனம் (ரூ.95 கோடி), வேதாந்தா நிறுவனம் (ரூ.67 கோடி) ஆகியவை அடங்கும்.
தனிநபர்கள் அனைவரும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். நிறுவனங்கள் காசோலை, வரைவோலை மற்றும் வங்கி பணப்பரிமாற்றம் வாயிலாக பணத்தைக் கொடுத்துள்ளன.
கடந்த 2017 - 18.ஆம் ஆண்டில் மத்திய அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் முறையை அறிமுகப்படுத்தி, நாடு முழுவதும் அதிக நிதி வசூலிக்கும் கட்சியாக பாஜக மாறியிருந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு..
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீரப்பில், தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது. அரசியல் சாசன பிரிவு 19(1) மீறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரத்துக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.