

தனிநபர்களின் நிதிநிலையை கணக்கிடும் சிபில் ஸ்கோர் பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் இன்னமும் நம்பப்படுகிறது. ஆனால், அதில் பல விவரங்கள் உண்மையில்லை என்றே கூறப்படுகிறது.
சிபில் ஸ்கோரை ஒருவர் சோதித்தாலே, அது குறைந்துவிடும், குறைந்த வருவாய் இருந்தால் சிபில் ஸ்கோர் குறையும் என்றெல்லாம் இதுவரை கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன. இதுநாள்வரை நாமும் நம்பிக்கோண்டிருக்கிறோம்.
சிபில் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண்களைக் கொண்டது. இது பெரும்பாலும் 300 முதல் 900 வரை இருக்கும். கடந்த கால நிதி நிர்வாகத்தை அடிப்படையாக வைத்து ஒருவரது சிபில் ஸ்கோர் அமையும்.
ஒரு கடனை அல்லது கடன் அட்டையை வழங்குவதற்கு முன்பு, வங்கி மற்று நிதி நிறுவனங்கள் இந்த சிபில் ஸ்கோரைப் பார்த்துதான் ஒருவருக்கு கடன் வழங்கலாமா என்பதை உறுதி செய்கின்றன.
சிபில் ஸ்கோருக்கு ஏற்ற வட்டியா?
நல்ல சிபில் ஸ்கோர் என்பது 650 அல்லது அதற்கும் மேல் இருக்க வேண்டும். இந்த சிபில் ஸ்கோர் அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை நிதி நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. அது மட்டுமல்ல, சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனுக்கான செயல்பாட்டுக் காலம் விரைவாக நடக்கும். சிலருக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு அதிக வட்டியில் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வருவதும் உண்டு.
தனிநபர்கள் தங்கள் சிபில் ஸ்கோர்களை சோதிக்கலாம்
தனிநபர்கள் தங்களது சிபில் ஸ்கோர்களை அவ்வப்போது சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அது எந்த வகையிலும் தனிநபர் நிதிநிலை வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாது. கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் சிபில் ஸ்கோரை சோதிப்பது மட்டுமே நிதி வரலாற்றில் பதிவாகும். ஒருவரின் சிபில் ஸ்கோரை நிதி நிறுவனங்கள் அவ்வப்போது சோதிக்கின்றன என்றால், அவர் அத்தனை கடன் விண்ணப்பங்களை அளித்திருக்கிறார் என்பதும் பதிவாகும். அதன் தாக்கத்தால், அவரது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால் தனி நபர்கள் அவ்வப்போது சிபில் ஸ்கோரை பார்த்து சோதித்து அவை நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்ல வழக்கம்தான் தவறில்லை.
செயலி மூலம் வாங்கும் சிறு கடன்கள்
தனிநபர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்யும் செயலிகள் மூலம் வாங்கும் சிறு கடன்கள், சிபில் ஸ்கோரில் இடம்பெறாது என்று கருதுகிறார்கள், அது தவறு.
இப்போது வாங்கிவிட்டு பிறகு செலுத்தலாம் என்பது போன்ற பிஎன்பிஎல் என்ற சிறு கடன்கள்கூட ஒருவரது கடன் வரலாற்றில் பதிவாகும். இது சிபில் ஸ்கோரை வெகுவாக பாதிக்கும். மிக எளிதாக கடன் கிடைக்கும் என்பதை மனதில் நினைக்கும்போது, இது சிபில் ஸ்கோரில் எதிரொலிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்க.
கடனை முன்கூட்டியே முடித்தால்
நிறைய கடன் இருப்பது சிபில் ஸ்கோரை பாதிக்காது. அதிக கடன் அட்டைகள் வைத்திருந்தாலும் பிரச்னை இல்லை. மிகப் பழைய கிரெடிட் கார்டு, அதில் தவறாத தவணைகள்தான் சிபில் ஸ்கோரை உயர்த்தும். ஒருவேளை, கிரெடிட் கார்டு கடனை எல்லாம் அடைத்துவிட்டு கிரெடிட் கார்டை திரும்ப வழங்கினால் அப்போதும் சிபில் ஸ்கோர் குறையலாம். எனவே, பழைய கிரெடி கார்டுகளை வைத்துக் கொண்டு அதில் கடன் தவணைகளை முறையாக செலுத்துவதே நல்லது.
குறைந்த வருவாய் இருந்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?
குறைந்த வருவாய் இருப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அதிக வருவாய் இருந்தால் அதிக கடன் தொகையை திரும்ப செலுத்த முடியும் அவ்வளவுதான். ஆனால், சிபில் ஸ்கோர் என்பது முழுக்க முழுக்க வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதை அடிப்படையாக வைத்தது. எந்த வகையிலும் ஒருவரது மாத வருவாய் சிபில் ஸ்கோரில் கணக்கிடப்படாது.
ஒருவேளை அதிக வருவாய் இருப்பவர்கள், இதுவரை எந்தக் கடனும் வாங்கவில்லை என்றால் அவர்களுக்கு சிபில் ஸ்கோர் பூஜ்யமாகக்கூட இருக்கலாம். அதுபோல அதிக வருவாய் இருந்தும், கடன் தவணைகள் தவறினால் அதனால் சிபில் ஸ்கோர் குறையலாம்.
கடன் தொகை உச்ச வரம்பு அதிகரித்தால்?
முறையாக தவணைகளை செலுத்துபவர்களின் கடன் தொகை உச்ச வரம்பு அதிகரிப்பது நல்ல அறிகுறிதான். நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் நம்பிக்கையே உச்ச வரம்பு அதிகரிக்கக் காரணம். ஒருவரது கடன் தொகை உச்ச வரம்பு அதிகரித்தாலும் கடன் தொகையை அதிகரிக்காமல் வைத்திருப்பது பாதுகாப்பானது. உச்ச வரம்பை தொடாமல் வைத்திருப்பதும் சிபில் ஸ்கோரை உறுதியாக்கும்.
உடனடியாக சிபில் ஸ்கோரை உயர்த்த முடியுமா?
கடன் தவணைகள் மற்றும் கிரெடிட் கார்டு தவணைகளை சரியாக உரிய காலத்துக்குள் செலுத்தினால் சிபில் ஸ்கோர் உயரும். இதனை உடனடியாக செய்ய முடியாது. ஆனால், உடனடியாக சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதாவது கடன் கேட்டு ஒருவர் அதிக முறை விண்ணப்பிப்பதால் சிபில் ஸ்கோர் குறையலாம். எனவே, அவ்வாறு செய்வதைத் தவிர்த்தால் குறைவதையும் தடுக்கலாம்.
கடன் வாங்கினால்தான் சிபில் ஸ்கோர் உயரும்
ஒருவர் இதுவரை எந்தக் கடனும் வாங்கவில்லை. அவருக்கு சிபில் ஸ்கோர் உயர்வாக இருக்குமா என்றால், கடன் வாங்காமலே இருப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்காது என்பதே உண்மை. கடன் வாங்கினால்தான் சிபில் ஸ்கோர் உருவாகும். கடன் தவணையை முறையாக செலுத்தும்போது சிபில் ஸ்கோர் அதிகரிக்கத் தொடங்கும். அவசியத் தேவைக்காக கடன் வாங்குவது நல்லதுதான். அதனை முறையாக செலுத்தும் வழிகளை அறிந்துகொண்டு உரிய நிதி திட்டமிடலுடன் கடன் வாங்கலாம். ஒரு பொருளை மொத்தமாக தொகை கொடுத்து வாங்க முடியாமல் இருக்கும்போது, சிறு தவணைகளாக செலுத்தும் வாய்ப்புடன் அதனை வாங்கி பயன்படுத்துவதும், கடனை விரைவில் அடைப்பதும் நல்லதுதான்.
எனவே, இதுபோன்ற நிதிநிலை தொடர்பான தவறான எண்ணங்களை கைவிட்டு, எந்தத் தகவலையும் உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும், செயற்கை நுண்ணறிவு காலம் இது. இதில் எந்த தகவல் வேண்டுமானாலும் உண்மை போன்றே படங்கள் மற்றும் விடியோக்கள் மூலம் பரப்பப்படலாம். எதையும் உறுதி செய்துகொள்ள வேண்டியதும் தனிநபர் பொறுப்புதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.