கட்டணமின்றி சிபில் ஸ்கோர் பெறுவது எவ்வாறு?

கட்டணம் செலுத்தாமல் சிபில் ஸ்கோர் பெறுவதற்கான வழிமுறைகள்..
வங்கிப் பணி
வங்கிப் பணி
Published on
Updated on
2 min read

சிபில் ஸ்கோர் என்பது, தனிநபரின் நிதிநிலை பற்றிய மதிப்பீடு. ஒருவரது கடன் பெறும் தகுதியை மதிப்பிடும் இந்த மூன்று இலக்க எண் மூலம், ஒருவர் நிதிநிலைமை எவ்வாறு உள்ளது, அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை நிதி அமைப்புகள் கணக்கிடுகின்றன.

இது ஒருவர் பெற்ற பல்வேறு கடன் மற்றும் அதனை கடனைத் திருப்பிச் செலுத்தியது உள்ளிட்ட நிதி மேலாண்மையின் அடிப்படையில் அமைகிறது. ஒருவர் கடன் பெற விண்ணப்பிக்கும்போது, மற்ற எந்த ஆவணங்களையும் விட, இந்த சிபில் ஸ்கோரைப் பார்த்துத்தான் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்கின்றன.

அது மட்டுமல்ல, தற்போதைய நவீன உலகில், பெண் பார்ப்பவர்கள், மணமகனின் சிபில் ஸ்கோர் பார்த்துதான் பெண் கொடுக்கிறார்கள் என்பதால், இளைஞர்களின் வாழ்க்கைக்கு இது மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது.

சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 720 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், சில நிதி நிறுவனங்கள் ஒருவருக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கடன் தொகை, கடனுக்கான வட்டியைக் கூட, இந்த சிபில் ஸ்கோர் வைத்துத்தான் தீர்மானிக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிபில் ஸ்கோரை இணையதளம் வாயிலாகவே சரிபார்த்துக் கொள்ளலாம்.

சில கடன் வழங்கும் நிறுவனங்களும், வாடிக்கையாளர்கள் தங்களது சிபில் ஸ்கோரைப் பார்த்துக் கொள்ள வசதிகளை வழங்குகின்றன.

சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி?

சிபில் ஸ்கோர் அளிக்கும் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

அதில் ஏற்கனவே கணக்கு இருந்தால் அதில் விவரங்களை அளித்து உள் நுழைய வேண்டும். கணக்கு இல்லாவிட்டால் புதிய கணக்குத் தொடங்கி உள் நுழைய வேண்டும்.

புதிய கணக்குத் தொடங்க, பெயர், மின்னஞ்சல், பிறந்த தேதி, அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை அளிக்கவும்.

உடனடியாக மின்னஞ்சல் முகவரிக்கு சிபில் ஸ்கோர் அனுப்பிவைக்கப்படும். ஒருவரது ஆண்டறிக்கையும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.

எப்படி கணக்கிடப்படும்?

அப்படியென்றால் கடன் வாங்காதவர்களுக்கு அதிக சிபில் ஸ்கோர் இருக்குமா என்றால் இல்லை. கடன் வாங்காதவர்களை விட கடன் வாங்கி சரியாக செலுத்துபவர்களுக்கே சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கும். அதாவது ஒருவர் கடனே வாங்கவில்லை என்றால், இந்த சிபில் ஸ்கோரில் அவருக்கென மதிப்பு இருக்காது. கடனை வாங்கி உரிய முறையில் செலுத்தியிருந்தால் அவர்களுக்கு 760க்கு மேல் சிபில் ஸ்கோர் இருக்கும்.

நல்ல சிபில் ஸ்கோர் ஏன் அவசியம்?

உடனடியாக கடன் கிடைக்கும்.

குறைந்த வட்டியில் அதிக தொகை கடனாக கிடைக்கும் வசதி.

கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்து எளிதாகப் பெறலாம்.

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் ப்ரீ-அப்ரூவல் கடனை வாரி வழங்கும்.

சில நிதி நிறுவனங்கள் கடன் செயல்பாட்டுக் கட்டணங்களைக் குறைக்கின்றன அல்லது தள்ளுபடி செய்துவிடுகின்றன.

சிபில் ஸ்கோர் எப்படி கணக்கிடப்படுகிறது?

வாங்கிய கடன் தவணையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தியிருப்பது.

பல ஆண்டுகளாக, ஒருவரது நிதிநிலைமை, கடன் வாங்கும் திறன், அதனை திருப்பிச் செலுத்திய வரலாறு அனைத்தும் கணக்கிடப்படும்.

அவ்வப்போது கடனுக்காக விண்ணப்பித்து, வேறு ஏதேனும் காரணங்களால் நிராகரிக்கப்பட்டாலும் கூட சிபில் ஸ்கோர் குறைந்து விடுமாம்.

ஒருவரது கிரிடிட் லிமிட் மற்றும் அவர் பெற்றிருக்கும் கடன் தொகையைப் பொருத்தும் மாறுபடலாம்.

சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தாலும் ஒருவர் வாங்கியிருக்கும் வீட்டுக்கடன், வாகனக் கடன் என அனைத்தையும் பரிசீலித்துதான் கடன் கொடுக்கப்படும்.

சிபில் ஸ்கோர் குறையக் காரணம்?

கடன் தவணையை செலுத்தாமல் இருப்பது, காலதாமதத்துடன் செலுத்துவது.

ஒருவரது அதிகபட்ச கடன் வரம்பு அளவுக்கு நிகராகக் கடன் பெற்றுவிடுவது.

அடிக்கடி கடன் விண்ணப்பங்கள் கொடுத்திருப்பது.

பழைய கடன் கணக்குகளை முன்கூட்டியே முடிப்பது.

சிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி?

ஒருவர் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கிறது என்றால் அதனை அவரே அதிகரிக்கவும் முடியும். அதாவது ஏற்கனவே வாங்கிய கடன் தவணைகளை சரியான நேரத்தில் கட்டுவது.

ஒருவரின் அதிகபட்ச கடன் வரம்பைக் குறைப்பது. அதிகபட்ச கடன் வாங்கியிருந்தால், ஒரு சில கடன்களாவது முடிந்து, வாங்கியிருக்கும் கடன் தொகை வரம்புக்குள் இருந்தால்தான் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.

யார் கடன் கொடுக்கிறேன் என்றாலும் உடனே கடன் கோரி விண்ணப்பிப்பதை சற்று குறைப்பது.

இதையெல்லாம் செய்த பிறகும் அதிகரிக்கவில்லை என்றால், நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறலாம்.

எதையெல்லாம் கணக்கெடுக்காது?

வருமானம், சேமிப்பு, பணியிடத்தில் பதவி, கல்வித் தகுதி, வாழ்முறை இவற்றையெல்லாம் சிபில் ஸ்கோர் கணக்கெடுக்காது. வாங்கியக் கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்துவது ஒன்றே வழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com