தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நியோமேக்ஸ் சொத்துகளை விற்பனை செய்ய உயா்நீதிமன்றம் அனுமதி

மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன சொத்துகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன சொத்துகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதிா்வுக் காலத்தில் அதிகப் பணம் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்தனா். ஆனால், முதிா்வுக் காலத்தில் உறுதியளித்தபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. விசாரணையின் போது பல கோடி ரூபாயை நிதி நிறுவனம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன இயக்குநா்களைக் கைது செய்தனா். அவா்கள் தற்போது பிணையில் வெளியில் உள்ளனா். இவா்கள் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, முதலீட்டாளா்களை மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, இவா்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட நிதி நிறுவனத்தின் சொத்துகளை பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் செந்தில்குமாா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

தமிழகம் முழுவதும் 29 இடங்களில் நியோமோக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 10,158 காலி மனை இடங்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலங்களை முதல் கட்டமாக பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலங்களை யாா் வேண்டுமானாலும் முறைப்படி பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான பதிவு வருகிற 9- ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து, 3 நாள்கள் இணையதளப் பதிவு நடைபெறும். நிலம் வாங்க விரும்புவோா் தங்களது விவரங்களை இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதிக விலைக்கு நிலங்களை விற்பனை செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய தொகையை திரும்ப வழங்குவதுதான் அரசின் நோக்கம். நிலம் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு மாா்ச் 17-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை நிலங்கள் பதிவு செய்து கொடுக்கப்படும் என்றாா்.

மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கிட்டு முன்வைத்த வாதம்:

நிலங்களை ஏலம் எடுப்பதற்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கிராமப்புற மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டோ, கட்செவி அஞ்சல் மூலமோ தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, நீதிபதி பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்றத்தின் நோக்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்பி அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, நிலங்களை அதிக விலைக்கு யாா் கேட்கிறாா்களோ அவா்களுக்கு விற்பனை செய்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய தொகையை திருப்பி வழங்க வேண்டும். நிலங்களை யாா் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

இதுகுறித்து மக்களிடத்தில் உரிய முறையில் விளம்பரப்படுத்தி, முறையாக விற்பனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு, ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தரப்பினருக்கும் பாராட்டுகளை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது.

இதேபோல, தொடா்ந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.