

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைப் பிரதமராக்கினால், அவரின் பாட்டியைப் போல் செயல்படுவார் என்று காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து பிரியங்கா காந்தி கடுமையாகப் பேசவில்லை என்று பாஜக விமர்சித்திருந்தது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் தெரிவித்ததாவது:
“பிரியங்கா காந்தி என்ன பிரதமரா? அவரைப் பிரதமராக்கிப் பாருங்கள், இந்திரா காந்தியைப் போன்று எப்படி பதிலடி கொடுப்பார் என்று. அவர் பிரியங்கா காந்தி. பெயருக்குப் பின்னால் காந்தி என்ற பெயர் இருக்கிறது. அவர் இந்திராவின் பேத்தி.
இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. பிரியங்காவைப் பிரதமராக்கினால் அவர் கொடுக்கும் பதிலடிக்குப் பிறகு, அப்படிச் செய்ய துணிச்சல் வராது.” எனத் தெரிவித்தார்.
இதனை விமர்சித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா தெரிவித்ததாவது:
“காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், தனக்கு இனி ராகுல் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். ராகுலுக்கு பதில் பிரியங்காவைக் கொண்டு வாருங்கள் என்பதே அவரின் கோரிக்கை.
அவர் பிரியங்கா காந்தியைப் பிரதமராக்கப் பணியாற்ற விரும்புகிறார். இதற்கு ராபர்ட் வதேராவும் இசைவு காட்டியுள்ளார். இதன்பொருள், மக்களின் ஆதரவு மட்டுமின்றி, கட்சியினர் மற்றும் குடும்பத்தினரின் அதரவையும் ராகுல் இழந்துவிட்டார்.
சில நாள்களுக்கு முன்னதாக, ஒடிஸா காங்கிரஸ் தலைவர் முகமது மோகிம் என்பவர், ராகுல் மற்றும் கார்கேவை தலைமைப் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, பிரியங்காவை அப்பதவியில் ஏற்ற வேண்டும் எனக் கூறினார். அவர் உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ராகுல் காந்தி மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை என்பது இடைவிடத் தெளிவாகத் தெரியாது.” என்று விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.