

ரூபாய் நோட்டுகளில் இருந்தும் காந்தியின் புகைப்படத்தை நீக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காந்தியின் புகைப்படத்தை நீக்கும் எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மறுத்து வரும் நிலையில், மீண்டும் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களுடன் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:
”அதிகாரப்பூர்வமாக ஆர்பிஐ மறுத்துவரும் நிலையில், முதல்கட்டமாக உயர்நிலைக் குழு அளவிலான ஆலோசனைகள் ஏற்கெனவே நடந்துவிட்டன. இது இனி வெறும் யூகமாக மட்டும் இருக்காது.
நமது ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் உருவப்படத்தை நீக்குவது, தேசத்தின் சின்னங்களை மாற்றி எழுதும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காந்தியின் உருவப் படத்துக்கு பதிலாக இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள், பாரத மாதா உருவம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1996 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி புகைப்படம் இடம்பெற்ற வரிசை ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அனைத்து நோட்டுகளிலும் அவரின் புகைப்படம் இடம்பெற்றது.
2022 இல் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றோர்களின் புகைப்படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, காந்தியின் படத்தை தவிர வேறெந்த தலைவரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்வதற்கான திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.