

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில், மதவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு, இந்தியாவின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஹரியாணா, ஒடிசா, சத்தீஸ்கர், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது குறித்து வெளியான செய்திகள் வருத்தமளிப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
“உத்தரப் பிரதேச அரசு கிறிஸ்துமஸ் திருநாளின் விடுமுறையை ரத்து செய்து, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளைக் கொண்டாட கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய, நடவடிக்கைகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் ஆகும்.
கேரளம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
மாநிலத்தின் தபால் நிலையங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், பாஜகவுடன் தொடர்புடைய பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதங்களை பாடவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தன.
இதற்கு, எதிர்ப்புகள் அதிகரித்ததால் பணியாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை திருவனந்தபுரம் தபால் நிலையத்தின் தலைமை அதிகாரி, ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன” என அவர் கூறியுள்ளார்.
இத்துடன், பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட குழுவினர் மீது சங் பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதல்களை பாஜக தலைவர்கள் நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும், முதல்வர் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சில தனியார் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சிலர் அழுத்தம் கொடுத்து மிரட்டுவதாக எழுந்த புகார்கள் குறித்து அரசு அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலை! அமித் ஷா திறந்து வைத்தார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.