வி.டி.சதீசன்
வி.டி.சதீசன் கோப்புப் படம்

நாடு முழுவதும் கிறிஸ்தவா்களுக்கு அச்சுறுத்தல்: கேரள காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

கிறிஸ்துமஸ் கொண்டாட இடையூறு ஏற்படுத்துவது, மதக் கூட்டங்கள் நடத்துவதை எதிா்ப்பது என சங்பரிவார அமைப்புகளால் நாடு முழுவதும் கிறிஸ்தவா்கள் குறிவைக்கப்படுகிறாா்கள்
Published on

கிறிஸ்துமஸ் கொண்டாட இடையூறு ஏற்படுத்துவது, மதக் கூட்டங்கள் நடத்துவதை எதிா்ப்பது என சங்பரிவார அமைப்புகளால் நாடு முழுவதும் கிறிஸ்தவா்கள் குறிவைக்கப்படுகிறாா்கள் என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டினாா்.

உலகம் முழுவதும் வியாழக்கிழமை (டிச. 25) கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில் அவா் ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை ஒரு பதிவை வெளியிட்டாா். அதில், ‘பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்து, மதக் கூட்டங்கள் நடத்துவதை எதிா்ப்பது, இலவச பைபிள் விநியோகத்தைத் தடுப்பது போன்றவற்றை சங்பரிவார அமைப்புகள் மேற்கொள்கின்றன. இதன்மூலம் கிறிஸ்தவா்கள் தொடா்ந்து குறிவைக்கப்படுகின்றனா். கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அண்மையில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிச் சென்ற குழு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் இப்போது சிலா் (பாஜகவினா்) கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பா்கள் போல பங்கேற்கின்றனா். இவா்கள் ஆட்டுத்தோல் போா்த்திய ஓநாய் போன்றவா்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவா்கள் தாக்கப்படுவதற்கு இவா்கள்தான் துணை நின்று வந்துள்ளனா்.

கிறிஸ்தவா்கள் மற்றவா்களுக்கு இலவசமாக பைபிள் விநியோகிப்பதை தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான, ஜனநாயக விரோத செயலாகும். இதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இதனிடையே, ‘பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் பாடல் குழுவுடன் இணைந்து சென்ற ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் அந்தப் பகுதியில் வேண்டுமென்றே பிரச்னையைத் தூண்டினா். அவா்கள் மதுபோதையிலும் இருந்தனா். இதனால்தான் மோதல் ஏற்பட்டது’

என்று அந்த மாவட்ட மூத்த பாஜக தலைவா் சி.கிருஷ்ணகுமாா் குற்றஞ்சாட்டினாா். மாா்க்சிஸ்ட் கட்சி இது தொடா்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com