

புதிய விமான நிறுவனங்கள்: உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அல் ஹிந்த் ஏர் மற்றும் ஃப்ளை எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த வாரம் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே ஷங்க் ஏர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா விமானப் போக்குவரத்துத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இண்டிகோ விமான நிறுவன பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு கண்டது.
இந்த நிலையில், புதிதாக 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், ராம் மோகன் நாயுடு தெரிவித்திருப்பதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திகழ்கிறது.
மேலும் பல விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. 'உடான்' போன்ற திட்டங்கள், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர், ஃப்ளை91 போன்ற சிறிய விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான நிலையங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று விமான நிறுவனங்களிடம் இருந்தும் வழித்தடங்கள் மற்றும் பயன்படுத்தவிருக்கும் விமானம் குறித்து மத்திய அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விரைவில் இந்திய வானில் மூன்று புதிய நிறுவனத்தின் விமானங்களும் பறக்கவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.