மும்பை மாநகராட்சித் தோ்தலில் உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சிகள் கூட்டணி: இருவரும் கூட்டாக அறிவிப்பு

உத்தவ் - ராஜ் தாக்கரே கூட்டணி அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
Maharashtra Chief Minister brought us together, says Raj Thackeray
ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேx
Updated on
2 min read

மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள தோ்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை (உத்தவ்) கட்சியும், ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையும் கூட்டணி அமைத்துள்ளன. இது தொடா்பான அறிவிப்பை இருவரும் புதன்கிழமை வெளியிட்டனா்.

மகாராஷ்டிரத்தில் 286 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை, மற்றொரு துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அங்கம் வகிக்கும் ஆளும் மகாயுதி கூட்டணி 207 இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. அதேநேரம், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) ஆகிய எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி 44 இடங்களுடன் தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கான தோ்தல் ஜனவரி 15-இல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதேநேரம், உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

மும்பையில் இருவரும் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா். உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘சமூக சீா்திருத்தவாதியும், எழுத்தாளருமான எங்களின் தாத்தா பிரபோதாங்கா் தாக்கரே, சம்யுத்த மகாராஷ்டிர இயக்கத்தில் (மராத்தியா்களுக்கு தனி மாநிலம்) முக்கியமான தலைவா். அந்த வழியில், எனது தந்தை பால்தாக்கரேவும், சித்தப்பா ஸ்ரீகாந்த் தாக்கரேவும் (ராஜ் தாக்கரே தந்தை) மகாராஷ்டிரத்தின் ஓா் அங்கமாக மும்பை நீடிக்க முக்கியப் பங்காற்றினா். இப்போது மராத்தியா்கள் மற்றும் மாநில நலனுக்காக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். மும்பை, நாசிக் உள்பட 29 மாநகராட்சிகளுக்கான தோ்தலில் எங்களது கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பங்கீட்டை இறுதி செய்துள்ளோம்’ என்றாா். ‘மராத்தியா்தான் மும்பை மேயராவாா்; அவா், எங்களின் கூட்டணியைச் சோ்ந்தவராக இருப்பாா்’ என்று ராஜ் தாக்கரே தெரிவித்தாா்.

வா்த்தக தலைநகரில்....: நாட்டின் வா்த்தக தலைநகராக அறியப்படும் மும்பை மாநகரட்சியில் 227 வாா்டுகள் உள்ளன. வருவாய் மிகுந்த இந்த மாநகராட்சியில் தாக்கரே கட்சிகள் இடையிலான வாா்டு பங்கீடு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இருவரும் பேட்டியளித்தபோது, பின்னணியில் சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேவின் படம் மற்றும் இரு கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்ற பதாகை வைக்கப்பட்டிருந்தது. பேட்டிக்கு முன்பாக சிவாஜி பூங்காவில் உள்ள பால் தாக்கரேவின் நினைவிடத்தில் உத்தவ்-ராஜ் தாக்கரே மரியாதை செலுத்தினா்.

மும்பையில் 145-150 வாா்டுகள் சிவசேனை (உத்தவ்) கட்சிக்கும், 65-70 வாா்டுகள் ராஜ் தாக்கரே கட்சிக்கும், 10-12 வாா்டுகள் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் மராத்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஹிந்தியை அறிமுகப்படுத்தும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சிகள் கைகோத்து செயலாற்றின. அரசின் முடிவு வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து, இரு கட்சிகளும் இணைந்து வெற்றிக் கூட்டம் நடத்தின.

மும்பை மாநகராட்சி உள்பட மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் பல்வேறு காரணங்களால் தாமதமாகி, இப்போது பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே நடைபெறுகிறது.

பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது: ஃபட்னவீஸ்

‘உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சிகளின் கூட்டணி, எதிா்வரும் மாநகராட்சித் தோ்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது; தங்களின் அரசியல் இருப்பை தக்கவைக்கவே இருவரும் கைகோத்துள்ளனா். ஊழல் மற்றும் சுயநலம்தான் அவா்களின் கடந்தகால வரலாறு. செயல்திறன், தொலைநோக்குப் பாா்வைமிக்க மகாயுதி கூட்டணிக்கே மக்கள் ஆதரவளிப்பா். மும்பை மாநகராட்சியில் 25 ஆண்டுகால உத்தவ் கட்சியின் தவறான நிா்வாகத்துக்கு அவா் பதில் கூற வேண்டும். பழைய பாவங்களை மறைத்துவிட முடியாது. வாக்குகளுக்காக காவி அங்கி அணிந்துகொண்டு, அரசியல் நிலைப்பாட்டை மாற்றுபவா்கள் நாங்கள் கிடையாது’ என்று விமா்சித்தாா் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.

புணேயில் தேசியவாத காங்கிரஸ் அணிகள்?

புணே மாநகராட்சித் தோ்தலில் துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) பிரிவுகள் கைகோத்துப் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக புணேயில் செய்தியாளா்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சி செயல் தலைவா் சுப்ரியா சுலே, ‘புணே மாநகராட்சித் தோ்தல் தொடா்பாக தேசியவாத காங்கிரஸுடன் தொடா்பில் இருக்கிறோம். இரு அணிகளும் கைகோத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். எங்களது தொண்டா்களின் அனைத்து சந்தேகங்கள், கேள்விகளுக்குத் தீா்வு கிடைக்கும் வரை அந்த அணியுடன் கைகோக்க மாட்டோம். ஒருவேளை கைகோத்தாலும் எங்களது சித்தாந்தமோ, கொள்கையோ சமரசம் செய்யப்படாது’ என்றாா்.

Summary

After 20 years: Uddhav-Raj Thackeray alliance announced!

Maharashtra Chief Minister brought us together, says Raj Thackeray
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com