

உன்னாவ் பாலியல் வழக்கு: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த, பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட தலைவா் குல்தீப் சிங் செங்காரின் சிறைத் தண்டனையை தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
தன்னுடைய நிலைமையை விளக்கியபோது சோனியா மற்றும் ராகுல் இருவரும் கண்ணீர் விட்டதாகவும், காங்கிரஸ் ஆளும் மாநிலத்துக்கு தான் குடிபெயர உதவ வேண்டும் என்றும், தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று காங்கிரஸ் தலைவர்களிடம் உன்னாவ் பெண் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குல்தீப் செங்காருக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும், நீதிமன்ற உத்தரவைக் கேட்டு நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண், தன்னை ராகுல் நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அவர்களது வீட்டுக்கு வந்து சோனியா மற்றும் ராகுல் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உன்னாவ் பாலியல் வழக்கில், மூத்த வழக்குரைஞரை அமர்த்தி, நீதி கிடைக்க உதவுவதாகவும், பிணை உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு செங்கரால் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில்,இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் தொடா்புடைய பிற வழக்குகள் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டன.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணை நீதிமன்றம் முன்னதாக குல்தீப் சிங் செங்காருக்கு வாழ்நாள் முழுமைக்கும் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் டிசம்பா் 2019 இல் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை குல்தீப் சிங் செங்காா் எதிர்த்து முறையீடு செய்துள்ளாா். அந்த மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை உயா் நீதிமன்றத்தால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதேபோன்று, வழக்கை விசாரித்த சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.