என்ன செய்கிறார் அழகு நட்சத்திரம் மோனலிசா போஸ்லே?

கும்பமேளாவில் கவர்ந்திழுத்த அழகு நட்சத்திரம் மோனலிசா போஸ்லே என்ன செய்கிறார் என்பதைப் பற்றி...
கும்பமேளாவில் மோனலிசா | புதிய படத் தயாரிப்பு பூஜையில் மோனலிசா போஸ்லே.
கும்பமேளாவில் மோனலிசா | புதிய படத் தயாரிப்பு பூஜையில் மோனலிசா போஸ்லே.படம்: Vengamamba Creationers
Updated on
3 min read

வசீகரிக்கும் கண்கள், கவர்ந்திழுக்கும் பேச்சு, 2025 ஆம் ஆண்டில் திடீரென ஒரே இரவில் சமூக ஊடகத்தால், ஒரே நாளில் உலகம் அறியும் பிரபலமாகி கும்பமேளாவில் ஜொலித்த அழகு நட்சத்திரம் மோனலிசா போஸ்லே! விரைவில் வெள்ளித் திரையிலும் பிரகாசிக்கப் போகிறார்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளா, ஆண்டுத் தொடக்கத்தில் ஜனவரியில் நடைபெற்றது. உலகெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் வந்து கங்கையின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர், சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாதுக்களும்கூட வந்தனர்.

இந்த பிரமாண்ட கலாசாரத் திருவிழாவைப் படம் பிடிக்கவும், விடியோக்கள் எடுக்கவும் பல யூடியூபர்களும், டிவி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வந்து படமெடுத்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் வெளியிட்டனர்.

மோனலிசா போஸ்லே.
மோனலிசா போஸ்லே.

இந்தப் பெருங்கூட்டத்தில் மணி மாலைகள் விற்றுக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை வழக்கம்போல யூடியூபர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட, அந்தப் பெண்ணின் அழகுத் தோற்றமும் துடிப்பும் பேச்சும் சேர்ந்து காட்டுத் தீ போல வேகமாகப் பரவி, அடுத்த சில நாள்களிலேயே பிரயாக்ராஜ் கும்பமேளாவுடன் இணைந்து பேசும் நட்சத்திரமானார்; அதுவே இன்று அவரை உச்சிக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது.

அவர்தான் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே. சுண்டி இழுக்கும் காந்தக் கண்ணுக்குச் சொந்தக்காரரான 16 வயதேயான மோனலிசா, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட நாடோடிகளாக வந்தேறி வாழ்பவர்களான லம்பாடா எனும் இனத்தைச் சேர்ந்தவர்.

பொன்னிறமான தோற்றம், வசீகரிக்கும் முக லட்சணம், புன்னகை பூக்கும் பழுப்பு நிற கண்கள், மகா கும்பமேளாவுக்கு வந்த அந்த இளம் பெண்ணின் அழகிய புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் பரவ அது முதலில் அவருக்குக் கொண்டாட்டத்தையும் பிறகு பெரும் திண்டாட்டத்தையும் ஏற்படுத்திவிட்டது.

மகா கும்பமேளாவுக்கு வந்து ஏராளமான ருத்ராட்ச மாலைகளையும், வண்ண மணிமாலைகளையும் விற்று ஏராளமான பணத்துடன் வீடு திரும்ப எண்ணி வந்த மோனலிசா போஸ்லே, மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் அன்பையும் பெற்றார். கூடவே சில கசப்பான அனுபவங்களும். ஆனால், கும்பமேளாவுடன் அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும், அவரை இன்று ஓர் உச்ச நிலையிலும் கொண்டு சேர்த்திருக்கிறது அந்த அழகு.

தொடக்கத்தில் தனது அழகால் பல இளைஞரின் துன்புறுத்தலுக்கு ஆளான மோனலிசாவுக்கு பட வாய்ப்பும் கதவைத் தட்டியது.

ஸ்ரீநகர், கஸ்னவி, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநரான சனோஜ் மிஸ்ரா என்பவர் மோனலிசாவுக்கு வாய்ப்புக் கொடுக்க முன்வந்தார். அதன்படி, தி டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்திற்கு பூஜை போட்டு படத்தைத் தொடங்கினார். படம் தொடங்கிய சில நாள்களிலேயே இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் இயக்குநர் மிஸ்ரா, சிறையில் அடைக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

ஆனாலும், மோனலிசாவும் அதிர்ஷ்டக் காற்றின் வேகம் குறைவதாகத் தெரியவில்லை. மலையாளத்திலும் தெலுங்கிலும் அவருக்கான அதிர்ஷ்ட காற்று மீண்டும் கதவைத் தட்டியது. அவர்கள் மட்டுமின்றி விளம்பரத் தயாரிப்பாளர்களும், ஓடிடி நிறுவனங்களும்கூட மோனலிசாவை அணுகி வெப் தொடர்களில் நடிக்க வைக்க போட்டி போட்டு வருகின்றன.

மோனலிசா போஸ்லே.
மோனலிசா போஸ்லே.

சிறையில் இருந்து வெளியே வந்த சனோஜ் மிஸ்ரா தற்போது மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கி நிறைவு செய்துள்ளார். விரைவில் பெரிய திரையில் மோனலிசாவைப் பார்க்கலாம் என்று சமீபத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

அதேசமயம் கடந்த நவம்பர் மாதத்தில் கோட்டபதி ஸ்ரீனு இயக்கத்தில் சாய் சரணுடன் லைப் - life என்ற தெலுங்கு படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மோனலிசா. ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் லேப்பில் இந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டு, இந்தப் படம் மிக முனைப்பாக உருவாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து மாலிவுட்டில் (மலையாள சினிமா) இருந்தும் மோனலிசாவுக்கு அழைப்பு வர, பினு வர்கீஸ் இயக்கத்தில் நடிகர் கைலாஷ் மற்றும் தயாரிப்பாளர் ஜூலி ஜார்ஜ் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் 'நாகம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவிருக்கிறார் மோனலிசா. இந்தப் படத்தின் பூஜை ஆகஸ்ட் மாதத்தில் கொச்சியில் நடைபெற்றது. இதில், மலையாள முன்னணி இயக்குநர் சிபி மலையிலும் கலந்துகொண்டார்.

மாலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் மோனலிசா விரைவில் தமிழிலும் அறிமுகலாம் என்றே தோன்றுகிறது.

Early Success is Scam (ஏர்லி சக்சஸ் இஸ் ஸ்கேம்) - ஆரம்ப கால வெற்றிகள் போலியானவை எனக் கூறுவதுண்டு. கவர்ந்திழுத்த காந்தக் கண்களால் வசீகரித்து இணையத்தைக் கலக்கிய மோனலிசா போஸ்லே, விரைவில் பான் இந்தியா நடிகையாக வலம் வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

கும்பமேளாவில் மோனலிசா | புதிய படத் தயாரிப்பு பூஜையில் மோனலிசா போஸ்லே.
2025: உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் ஆன்மிக சங்கமம்!
Summary

Monalisa, who captured everyone's attention through social media with her wide eyes while selling beads at the Kumbh Mela, has become a heroine in Telugu cinema. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com