பாஜக - சிவசேனை கூட்டணி மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் 286 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை, மற்றொரு துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அங்கம் வகிக்கும் ஆளும் மகாயுதி கூட்டணி 207 இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. அதேநேரம், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) ஆகிய எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி 44 இடங்களுடன் தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில், மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கான தோ்தல் ஜனவரி 15-இல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதேநேரம், உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதுதொடா்பான அறிவிப்பை உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே இருவரும் மும்பையில் புதன்கிழமை கூட்டாக வெளியிட்டனா்.
மேலும் புணே மாநகராட்சித் தோ்தலில் துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) பிரிவுகள் கைகோத்துப் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மகாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து புணேவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக மற்றும் சிவசேனை இடையேயான கூட்டணி ஒரு தன்னலமற்ற கூட்டணி. இது அதிகாரத்திற்கான கூட்டணி அல்ல. சிலர் சுயநலத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் கூட்டணிகள் அமைக்கிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணி மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.