

ஜிமெயில் முகவரியை பத்தாண்டுகளுக்கு முன்பு உருவாக்கி, அதனை இப்போதுவரை அப்படியே பயன்படுத்தி வருபவர்களுக்கு சிறப்பான செய்தி கிடைத்திருக்கிறது. ஜிமெயில் முகவரியில் மாற்றவோ சிறு திருத்தம் செய்யவோ இதுவரை வாய்ப்பில்லை. இனி அந்த நிலை மாறுகிறது.
பல ஆண்டு காலமாக பயனர்கள் அதிகம் வைத்திருந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூகுள் அறிவித்திருக்கிறது.
இது குறித்து கூகுள் இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. ஆனால், கூகுள் சப்போர்ட் பக்கத்தின் பயனர்கள், ஜிமெயில் முகவரியில் மாற்றம் செய்ய என்ற ஒரு வாய்ப்பு புதிதாக இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் எடுத்திருக்கும் மிகப்பெரிய முடிவு இது என்றும், ஆனால், இது எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அனைவரும் கூறுகிறார்கள்.
ஜிமெயில் முகவரியில் மாற்றம் என்றால்?
ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய ஜிமெயில் முகவரியில் இருக்கும் யூசர்நேம் எனப்படும் ஐடியை மாற்றிக் கொள்ளலாம். முகவரியை புதிதாக மாற்றுவதால், ஏற்கனவே இருக்கும் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் வந்து சேருவதிலோ, பழைய மின்னஞ்சல்களிலோ எந்த பாதிப்பும் வராது என்றும் கூகுள் தரப்பில் கூறப்படுகிறது.
பழைய முகவரி மற்றும் அதனை புதிதாக திருத்திய முகவரி என இரண்டுக்கும் வரும் மின்னஞ்சல்களும் ஒரே இன்பாக்ஸில்தான் வரும்.
எப்படி மாற்றுவது? எத்தனை முறை மாற்றலாம்?
ஜிமெயில் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயிக்கலாம். அதற்கு மேல் முகவரியை மாற்ற இயலாது என்று கூறலாம். ஒரு முறை மாற்றினால் 12 மாதத்துக்குப் பிறகுதான் மீண்டும் மாற்றலாம் அல்லது ஒரு ஜிமெயில் முகவரியை அதிகபட்சமாக 3 முறை மட்டுமே மாற்றலாம் என சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். புதிய முகவரியை மாற்றிய பிறகு, பழைய முகவரி உங்கள் மின்னஞ்சல் பயனர் ஐடியாக தொடராது என்றும் கூறப்படுகிறது.
புதிய வசதி எப்போது?
ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அறிமுகப்படுத்தி, சோதனை முயற்சியாக அங்கு எப்படி போகிறது என்பதை கவனிக்கும் கூகுள். பிறகு, அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது எப்படி செயல்படும் என்பது குறித்து இப்போதே ஜிமெயில் பயனர்களுக்கு ஆவல் அதிகரித்திருக்கிறது. தங்கள் முகவரியை எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என இப்போதே சிந்திக்கவும் தொடங்கிவிட்டார்களாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.