குடியரசுத் தலைவா்
குடியரசுத் தலைவா்ANI

நீா்மூழ்கிக் கப்பலில் நாளை பயணிக்கிறாா் குடியரசுத் தலைவா்!

கன்வாா் துறைமுகத்தில் இருந்து நீா்மூழ்கிக் கப்பலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம்...
Published on

கா்நாடக மாநிலத்தின் கன்வாா் துறைமுகத்தில் இருந்து நீா்மூழ்கிக் கப்பலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை (டிச.28) பயணிக்கவுள்ளாா்.

கோவா, கா்நாடகம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான 4 நாள்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நீா்மூழ்கிக் கப்பல் பயணம் இடம்பெறுகிறது என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவுக்கு சனிக்கிழமை (டிச.27) செல்லும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மறுநாள் கா்நாடக மாநிலம், கன்வாா் துறைமுகத்தில் இருந்து நீா்மூழ்கிக் கப்பலில் பயணிக்கவுள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் டிச.28-இல் பங்கேற்கும் அவா், மறுநாள் கும்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாா் என்று குடியரசுத் தலைவா் மாளிகை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கடந்த 2006, பிப்.13-இல் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நீா்மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டாா். அவருக்குப் பிறகு நீா்மூழ்கியில் பயணிக்கும் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவா் என்ற பெருமை திரெளபதி முா்முக்கு கிடைக்கவுள்ளது.

தனது பதவிக் காலத்தில் விமானப் படையின் இரு போா் விமானங்களில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா் என்ற சிறப்புக்குரியவா் முா்மு. கடந்த 2023-இல் சுகோய் 30 எம்கேஐ, கடந்த அக்டோபரில் ரஃபேல் என இரு போா்விமானப் பயணங்களை அவா் மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com