

ஜெர்மனியில் உயர் படிப்புக்காகச் சென்ற இந்திய மாணவர்களுக்கு சோதனை :
ஜெர்மனியில் உரிய அங்கீகாரமில்லாமல் இயங்கும் பல்கலைக்கழகங்களால் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நாடு கடத்தப்படவிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற கனவுடன் சென்ற இந்திய இளைஞர்களுக்கு கிலியூட்டுவதாக அண்மையில் வெளிநாடுகளில் அரங்கேறிய நிகழ்வுகள் அமைந்துள்ளன. இந்தியாவிலிருந்து ஜெர்மனியிலுள்ள பிரபல தனியார் சர்வதேச பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புக்காகச் சென்ற இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படவிருக்கிறார்களாம்.
அதற்கான முதன்மைக் காரணம், அந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்ந்துள்ள படிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் பெறப்படவில்லையாம்! இதன் காரணமாக, அந்தப் பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி சேர்ந்த மாணவர்களின் கதி பரிதாபமாகியுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி, அந்தப் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெறாத படிப்புகளில் சேர்ந்துள்ள இந்திய மாணவர்களைத் தாயகம் திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையேல், நாடு கடத்தப்படுவீர்கள் என்றும் சற்று கடுமையாகவே எச்சரிக்கப்பட்டுள்ளனராம்.
இது குறித்து, அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் ஒருவர் பேசியதைப் பார்க்கலாம் : “இந்தப் பல்கலைக்கழகம் இங்கு பயிற்றுவிக்கப்படும் படிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் பெறாததே இதற்கான காரணம். இங்குள்ள வளாகத்தில் போதுமான வசதிகளும் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான பேராசிரியர்களே பணியில் உள்ளனர். என்னைப் போன்றே சுமார் 300 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த மார்ச் முதலே தாயகம் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளுக்கு அதிகாரிகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. இதுவே காரணம். இதையடுத்து, அந்தப் பட்டியலில் உள்ள மாணவர்களில் பலர் வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துவிட்டனர். ஆனால், அப்படி இடம் மாறிய மாணவர்கள் எல்லோரும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இங்கிருந்து கிளம்பிவிட்டனர். அவர்களுக்கு இங்கு ஆதரவு இல்லையெனெனில், அவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தோர்” என்றார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருபகுதியினர் தாங்கள் சேர்ந்துள்ள படிப்பைத் தாயகம் திரும்பி தொலைதூரக் கல்வி முறையிலோ அல்லது ஆன்லைன் முறையிலோ வீடுகளிலிருந்தே தொடர உள்ளனர். ஆனாலும், எல்லா மாணவர்களாலும் படிப்பை பிற வழிகளில் தொடர முடியாத சிக்கலும் உள்ளதாம்.
இங்கிருந்து ஜெர்மனியில் உள்ள மேற்குறிப்பிட்ட தனியார் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கான தனியார் கல்வி ஆலோசனை நிறுவனம்/முகமை மூலம் சேர்ந்த இந்திய மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறதாம்.
அவ்வகையில் அங்கு உயர்படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் முதல் பகுதியை இந்தியாவிலிருந்தபடியே ஆன்லைன் வழியாகவும் அதன்பின் இரண்டாம் பகுதியை ஜெர்மனி சென்றும் படிக்கின்றனர். மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுள் ஐந்தில் ஒரு பகுதியினர் இந்திய மாணவர்களாவர்.
இப்போது மாணவர்களுக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பட்டம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்களின் ஜெர்மனி கல்விக் கனவை சாதகமாக்கி பணத்தை பெற்றுக்கொண்டு உரிய அங்கீகாரமில்லா படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்ட அந்த நிறுவனம் மீது மாணவர்கள் தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.