

ஆந்திரப் பிரதேசத்தில் டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்ததில் பயணி ஒருவர் பலியானார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், யலமஞ்சிலி அருகே டாடாநகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 12:45 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலின் இரண்டு பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது.
உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு விரைந்த அவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் இந்த விபத்தில் பயணி ஒருவர் பலியானார். பலியானவர் சந்திரசேகர் சுந்தரம் என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் தீப்பிடித்தபோது பாதிக்கப்பட்ட ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் 76 பயணிகளும் இருந்தனர். பி1 பெட்டியில் இருந்து ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சேதமடைந்த இரண்டு பெட்டிகளும் எர்ணாகுளம் நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டன. சேதமடைந்த பெட்டிகளில் இருந்த பயணிகளும் அவர்களின் இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.
இதனிடையே தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்கள் பணியாற்றி வருவதாக காவல் துறை அதிகாரி கூறினார்.
இந்த எக்ஸ்பிரஸ் ரயில் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட நிகழ்வு பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதோடு அவர்களின் தூக்கத்தையும் கலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.