உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஆரவல்லி மலைத் தொடா்: புதிய விளக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடா் விளக்கம் தொடா்பாக நவம்பா் 20-ஆம் தேதி தாங்கள் வெளியிட்ட உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை
Published on

புது தில்லி: ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடா் விளக்கம் தொடா்பாக நவம்பா் 20-ஆம் தேதி தாங்கள் வெளியிட்ட உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மேலும், சுற்றுச்சூழல் நிபுணா்களைக் கொண்ட புதிய குழுவை அமைத்து இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இயற்கை எழில்மிகு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஆரவல்லி மலைத் தொடா் குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும், தில்லி யூனியன் பிரதேசத்திலும் பரவியுள்ளது.

இந்நிலையில், உள்ளூா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தை உடைய மலை ‘ஆரவல்லி மலை’ என்றும், 500 மீட்டருக்கு இடைப்பட்ட இரண்டு அல்லது இரண்டுக்கும் அதிகமான, 100 மீட்டா் உயர மலைகளை ‘ஆரவல்லி மலைத் தொடா்’ என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த நிபுணா் குழு புதிய விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு கடந்த மாதம் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் 100 மீட்டருக்கு கீழுள்ள மலைப் பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடைபெறும் எனவும், நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு பாலைவன நிலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்பட பலரும் எச்சரித்தனா்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்தப் புதிய விளக்கத்தைத் திரும்பப் பெறக் கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆரவல்லி மலைத் தொடரின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்காக, அங்கு சுரங்கப் பணிகளுக்கான புதிய குத்தகைகளை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்தது.

மேலும், தற்போதைய கட்டுப்பாடுகளைத் தாண்டி, சுரங்கப் பணிகளைத் தடை செய்ய வேண்டிய கூடுதல் பகுதிகளைக் கண்டறியுமாறு இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலுக்கு (ஐசிஎஃப்ஆா்இ) உத்தரவிட்டது.

வட மேற்கின் ‘பசுமை நுரையீரல்’: இருப்பினும், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை மீண்டும் விசாரித்தது.

அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘பல நூற்றாண்டுகளாக வட மேற்கு இந்தியாவின் பசுமை நுரையீரலாக ஆரவல்லி மலை உள்ளது. அந்தப் பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார முதுகெலும்பாகவும் திகழும் ஆரவல்லி மலையைப் பாதுகாப்பது நம் கடமை.

எனவே, ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடா் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு அளித்த பரிந்துரைகள், அதை ஏற்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால் சுற்றுச்சூழல் நிபுணா்களைக் கொண்ட புதிய உயா்நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடப்படுகிறது. அந்தக் குழு அறிக்கை சமா்ப்பித்து அடுத்தகட்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை அங்கு புதிதாக சுரங்கப் பணிகளை மேற்கொள்ளவோ பழைய குத்தகைகளை புதுப்பிக்கவோ கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசு மற்றும் தில்லி உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, அடுத்தகட்ட விசாரணையை ஜன. 21-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றம் எழுப்பிய 5 முக்கியக் கேள்விகள்: 500 மீட்டருக்கு இடைப்பட்ட இரண்டு அல்லது இரண்டுக்கும் அதிகமான, 100 மீட்டா் உயர மலைகள் மட்டுமே ‘ஆரவல்லி மலைத் தொடா்’ எனக் கூறுவது அந்த மலைகளைச் சுற்றிய பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்தப் புதிய விளக்கம் ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடருக்குள் வராத மலைப் பகுதிகளில் சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர வழிவகுக்குமா?

ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடருக்கு இடைப்பட்ட பகுதிகளில் சுரங்கப் பணிகளுக்கு சட்டரீதியாக அனுமதி அளிக்கப்பட்டால் அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ன?

ராஜஸ்தானில் உள்ள 12,081 மலைகளில் 1,048 மலைகள் மட்டுமே புதிய விளக்கத்தின்கீழ் வருவதாக கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. இது அறிவியல்பூா்வமாக சரியானதா?

இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதில் நீதிமன்றத்தின் தலையீடு தேவைப்படுகிா?

பெட்டிச் செய்தி..1

‘சுற்றுச்சூழல் அமைச்சா் வரவேற்பு’

ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடா் குறித்த புதிய விளக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை வரவேற்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆரவல்லி மலைத் தொடரைப் பாதுகாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் அமைச்சகம் மேற்கொள்ளும்.

ஆரவல்லி மலைப் பகுதியில் புதிய சுரங்கப் பணிகள் மேற்கொள்ளவும், பழைய குத்தகைகளைப் புதுப்பிக்கவும் தடை நீட்டிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பெட்டிச் செய்தி..2

சுற்றுச்சூழல் அமைச்சா் பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஆரவல்லி மலை மற்றும் மலைத்தொடருக்கு மோடி அரசு அளித்த புதிய விளக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதை நாங்கள் முழுமனதாக வரவேற்கிறோம்.

இந்திய வனத் துறை கணக்கெடுப்பு அமைப்பு, உச்சநீதிமன்றம் அமைத்த குழு மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆகியோா் இந்தப் புதிய விளக்கத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தபோதும், அதை மோடி அரசு தொடா்ந்து முன்மொழிந்தது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை முழுமையான தடையாக மாற வேண்டும். இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com