

இந்தியா கூட்டணிக்குள் நாள்தோறும் பிரச்னை அதிகரித்து வருவதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா திங்கள்கிழமை தெரிவித்தார்.
திமுக தலைமையிலான தமிழக அரசு, உத்தரப் பிரதேசத்தைவிட அதிக கடன் சுமையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஷெஸாத் பூனாவாலா பேசியதாவது:
”இந்தியா கூட்டணிக்குள் ஒவ்வொரு நாளும் புதிய மோதல்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. இது துண்டு துண்டாகும் கூட்டணி. இவர்களுக்கு நோக்கமோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை, வெறும் குழப்பம் மட்டுமே இருக்கிறது.
நேற்று காங்கிரஸுடன் கேரள முதல்வர் மோதியதை பார்த்தோம். இன்று, திமுகாவை காங்கிரஸ் தாக்கியுள்ளது. ஸ்டாலின் மாதிரியை நிராகரித்து யோகியின் மாதிரியை ஆதரிக்கிறார்கள். இதை ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். அதாவது, இதை ராகுல் காந்தியே கூறியிருக்கிறார் என்று அர்த்தம்.
வெற்றுக் காகிதத்தில் மட்டுமே இந்தியா கூட்டணி செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்களை எல்லா இடங்களிலும் ஒரு மூத்த சகோதரனாகக் கருதுகிறார்கள். ஆனால் தற்போது ராகுல் காந்திக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளும் ராகுல் காந்தியை தலைவராக ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, இதுவும் ஒரு முத்தலாக் நிலையை நோக்கியே செல்கிறது.” என்று விமர்சித்துள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.