

உன்னாவ் வழக்கு - உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட குல்தீப் சிங்குக்கு தண்டனையை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே, டிசம்பா் 2019-இல் விசாரணை நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு முடிவடையும் வரை, செங்கரை ஜாமீனில் விடுவிக்க தில்லி உயா்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருப்பது நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று காலை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவில் முக்கிய குறிப்புகள்:
பொதுவாக இடைநிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு அவற்றில் தலையிடப்படுவதில்லை என்றாலும், குற்றவாளி மற்றொரு வழக்கில் சிறையில் இருப்பதால், இது அசாதாரணமான சூழ்நிலையாக இருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் தண்டனை இடைநிறுத்த உத்தரவில் கணிசமான சட்டக் கேள்விகள் எழுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(2)(i)-இன் கீழ் உள்ள தண்டனையை உயர் நீதிமன்றம் ஆராய்ந்ததா என்பது குறித்து கடுமையான கவலை எழுகிறது.
போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு காவலரை பொது ஊழியராக கருதும் விளக்கம் இருக்கும் நிலையில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அதிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.
போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் தண்டனை அதிகரிப்பு தொடர்பானவை, புதிய குற்றத்தை உருவாக்குவது அல்ல.
“சிறந்த நீதிபதிகளும் கூட தவறுகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்” என்றும், நீதித்துறை ஆய்வு அமைப்பின் ஒரு பகுதி.
நீதித்துறையை பொதுவில் அவமதிப்பது மற்றும் சட்டப் போராட்டங்களை “தெருக்களுக்கு” கொண்டு செல்வதற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
மேலும், குல்தீப் சிங் செங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.