

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓய்வு இல்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
குல்தீப் சிங்குக்கு தண்டனையை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்துள்ளதை வரவேற்ற அப்பெண், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்துக்கு இன்றும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இந்தபோதும் சட்டப்போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
இந்த தீர்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உச்ச நீதிமன்றத்திடமிருந்து எனக்கு நீதி கிடைத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே நான் நீதிக்காகக் குரல் கொடுத்து வருகிறேன். நான் எந்த நீதிமன்றத்தின் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை. எனக்கு நீதிமன்றங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கியுள்ளது, இனியும் வழங்கும்.
செங்கருக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை நான் ஓய மாட்டேன். தொடர்ந்து போராடுவேன். அப்போதுதான் எனக்கும் என் குடும்பத்திற்கும் நீதி கிடைக்கும். இன்றும் கூட என் குடும்பத்துக்கு மிரட்டல்கள் வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இந்த வழக்கில், செங்கருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2019-இல் ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கு எதிரான செங்கரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயா் நீதிமன்றம், மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அத்துடன் அவருக்கு ஜாமீன் அளித்தும் உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவலில் மரணமடைந்த வழக்கில் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால், அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
எனினும், பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்துள்ள தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை நிறுத்திவைத்தது. மேலும், குல்தீப் சிங் செங்கருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.