

கேரளத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அதிகப்படியான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அசெளகரியம் மற்றும் உடல்நலக் குறைவால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பேக்கல் கடற்கரை கோட்டைப் பகுதியில் டிசம்பர் 29 ஆம் தேதி இரவு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி இரவு 8 மணிக்குத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 90 நிமிடங்கள் தாமதமாகவே நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதனால், பல மணிநேரமாக காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள், மேடையை நோக்கி நகர்ந்துள்ளனர்.
அதிகப்படியாக கூட்டம் மேடை அருகே சூழ்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பேக்கல் காவல் நிலைய அதிகாரி, கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
இதனிடையே, இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள கொயிலாண்டி பகுதியில் இருந்து வந்த இளைஞர், பேக்கல் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேக்கல் விடுதி மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கேரள சுற்றுலாத் துறை சார்பில் டிசம்பர் 20 முதல் 31 வரை பேக்கல் சர்வதேச கடற்கரை திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.