

உலகம் முழுவதும் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஸ்டார்ட்அப் மூலம் இளம் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பின்புலம் ஏதுமின்றி திறமையின் மூலம் கோடீஸ்வரர்களாகியுள்ள 40 வயதுக்குட்பட்டவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவைச் சேர்ந்த அங்குர் ஜெயின், நிகில் கமத் மற்றும் 22 வயதுடைய இரு ஏஐ தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அங்குர் ஜெயின்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழுவில் முதன்மையான இடத்தில் அங்குர் ஜெயின் உள்ளார். உலக அளவிலான பட்டியலில் 19 வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டாலர்கள். பிட்ல் ரிவார்ட்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிதி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலராக உள்ளார். நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு பிட்ல் ரிவார்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பயன்பாட்டிற்கு ஏர்ப பயனர்களுக்கு ரிவார்ட்ஸை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
நிகில் கமத்
அங்குர் ஜெயினுக்கு அடுத்தபடியாக 20 வது இடத்தில் நிகில் கமத் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலர்கள். 40 வயதுக்கு கீழ் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஸ்டார்ட்அப் தொடங்கிய ஒரே நபர் இவராவார். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸெரோதா என்ற தரகு மற்றும் நிதி நிறுவனத்தின் இணை நிறுவனரான நிகில் கமத், தலைமை நிதி ஆலோசகராகவும் உள்ளார். இவரின் சகோதரர் நிதின் கமத் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஸெரோதாவின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யா மிதா & ஆதர்ஷ் ஹிரேமத்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூர்யா மிதா மற்றும் ஆதர்ஷ் ஹிரேமத் ஆகியோர் இப்பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு தலா 2.2 பில்லியன் டாலர்கள். சான்ஃபிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனமான மெர்கோர் நிறுவனத்தின் இணை நிறுவனர்.
2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மூலம் ஏஐ ஆய்வகங்களுக்காக திறமையாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு வருகின்றனர். அக்டோபர் நிலவரப்படி மெர்கோர் நிறுவன சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்கள். சூர்யா மிதா நிறுவனத்தின் தலைவராகவும், ஆதர்ஷ் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.