

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மகர ஜோதி அன்று 35,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலையில் மலையாள மாதம் விருச்சிகத்தின் (காா்த்திகை) முதல் நாளான நவ. 17-ஆம் தேதி தொடங்கி 41 நாள்கள் நடைபெற்ற மண்டல பூஜை யாத்திரை கடந்த சனிக்கிழமையுடன் (டிச. 27) நிறைவடைந்தது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு ‘ஹரிவராசனம்’ பாடல் இசைக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்பட்டது.
மண்டல பூஜை காலகட்டத்தில் மட்டும் சுமார் 36 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சுமார் ரூ. 332 கோடிக்கு மேல் காணிக்கை அளித்தனர்.
இந்த நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் வரும் ஜன. 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.
வழக்கமாக நாளொன்றுக்கு 70,000 பக்தர்கள் வரை சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில், மகர ஜோதி அன்று 35,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ இன்னும் வெளியிடப்படவில்லை.
மகரவிளக்கு பூஜைக்குப் பிறகு பக்தா்கள் 19-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். தொடா்ந்து, 20-ஆம் தேதி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை அடைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.