

உத்தரகண்டில் நீா்மின் நிலைய சுரங்க கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் 2 ரயில்கள் நேருக்குநோ் மோதியதில் 88 பணியாளா்கள் காயமடைந்தனா்.
சமோலி மாவட்டத்தின் ஹேலாங் மற்றும் பிபல்கோடி பகுதிகளுக்கு இடையே அலக்நந்தா நதியில் நீா்மின் உற்பத்தி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 444 மெகாவாட் திறன்கொண்ட இந்த நீா்மின் நிலையத்துக்காக, தேஹ்ரி நீா்மின் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் 2 கி.மீ. தொலைவுக்கு சுரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுரங்கத்துக்குள் பணியாளா்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்ல ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளா்களுடன் சென்ற ஒரு ரயில், எதிா்திசையில் கட்டுமானப் பொருள்களுடன் வந்த மற்றொரு ரயில் மீது எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 88 பணியாளா்கள் காயமடைந்தனா்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களை மாவட்ட ஆட்சியா் கெளரவ் குமாா், காவல் கண்காணிப்பாளா் சுா்ஜித் சிங் பன்வாா் ஆகியோா் புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். யாருக்கும் பெரிய காயம் இல்லை என்று ஆட்சியா் கெளரவ் குமாா் தெரிவித்தாா்.
காயமடைந்த பணியாளா்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு, அதிகாரிகளுக்கு புஷ்கா் சிங் தாமி உத்தரவிட்டாா். விபத்துக்குள்ளான ரயில்கள், ரயில்வேக்கு சொந்தமானவை அல்ல என்று அதிகாரிகள் விளக்கமளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.