
இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்படியானவர்கள் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உருவெடுத்திருக்கிறது. அசுத்தமான தண்ணீரால் ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டு வந்தநிலையில், புணேவில் சுகாதாரமற்ற மாசடைந்த நீரை தண்ணீர் லாரிகள் விற்றது தான் நோய் பரவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்புகள் ஜிபிஎஸ் நோய்ப் பரவலுக்கு பொதுவான காரணமாக உள்ளது. அசுத்தமான தண்ணீரில் காணப்படும் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி என்ற பாக்டீரியாவே இந்த தொற்றுநோய்க்கான காரணம் என்றும் கூறுகின்றனர். சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாக்டீரியா தொற்று உள்ளிட்டவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க: கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!
பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டவர்களுக்கே அதிகளவில் ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்படுகிறது. நரம்பியல் பாதிப்பினால் தசைகளில் திடீர் உணர்வின்மை மற்றும் பலவீனம் இரண்டையும் ஏற்படுத்துகிறது. கை மற்றும் கால்களில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்கும்.