
புது தில்லி: வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மத்திய அரசு இயற்றிய வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘திருத்தப்பட்ட சட்டத்தில் வனம் என்பதற்கான விளக்கத்தில், சுமாா் 1.99 லட்சம் சதுர கிலோமீட்டா் வனப் பகுதி சோ்க்கப்படவில்லை’ என்று மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், அந்த மனுக்கள் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘வனப் பகுதியை குறைக்க வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் அனுமதிக்காது. குறைக்கப்படும் வனப் பரப்புக்கு ஈடான நிலம் வழங்கப்படும் வரை, வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்தத் தடை நீடிக்கும்.
இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.