
பெங்களூருவில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை கொலைக் குற்றவாளி போல காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
காரணம் வேறு ஒன்றுமில்லை.. அந்த வாகனத்தின் மீது பல முறை சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தொடர்ந்து போக்குவரத்துக் காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.1.61 லட்சம் என்கிறது தரவுகள்.
இவ்வாறு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த வாகனத்தில் பயணித்தவர்கள் சாலை விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது மட்டும் 311 முறை என்கிறது தகவல்கள்.
தொடர்ந்து சாலை விதி மீறல்களில் ஈடுபட்டு, அபராதத் தொகையும் கட்டாமல் தப்பிவந்த வாகன ஓட்டியை திங்கள்கிழமை போக்குவரத்துக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டி வந்தவரும், வாகன உரிமையாளரும் வேறு வேறு என்பதால், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வாகனத்தின் மீது, தலைக்கவசம் அணியாதது, சிக்னல்களில் நிற்காமல் சென்றது என 300க்கும் மேற்பட்ட முறை அபராதம் விதித்து மொத்த தொகை ரூ.1.61 லட்சமாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.