
புது தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது. இங்கு தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் குடிமகன் வாழும் வீடு, நாட்டின் குடியரசுத் தலைவரின் மாளிகை என பல்வேறு பெருமைகளைக் கொண்ட குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் முறையாக ஒரு திருமணம் நடைபெறவிருக்கிறது. அதுவும், குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணிக்கு தலைமையேற்றிருக்கும் சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தா, ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள சிஆர்பிஎஃப் வீரரான துணைத் தளபதி அவினாஷ் குமார் திருமணம் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
அனுமதி அளித்தது எப்படி?
சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தா, தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் பணியை தலைமையேற்று கவனித்து வருகிறார். இவர், புது தில்லியில் நடைபெற்ற 74வது குடியரசு தின பேரணியில், அனைத்து மகளிர் கான்டினெட் படைகளுக்கும் தலைமையேற்று வழிநடத்தியிருந்தார். பணியில் அவருடைய அர்ப்பணிப்பு, தொழில்திறன் மற்றும் நடத்தை விதிகளைப் பின்பற்றுவதில் உள்ள கண்டிப்பு போன்றவற்றின் காரணமாகவே, அவரது திருமணத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமணம் செய்துகொண்ட முதல் பெண்ணாகவும், முதல் சிஆர்பிஎஃப் வீராங்கனை என்ற பெருமையையும் பூனம் குப்தா பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் புதிய வரலாறும் படைக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில், மணமக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் முன்னிலையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.