
உலக அளவிலான செல்போன் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 தயாரிப்பு மையங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
செல்போன் தயாரிப்பு குறித்து தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ரயில்வே மின்னணுவியல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது,
''2014 - 15ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட செல்போன்களில் 26% மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. எஞ்சியவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை.
இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 32.5 கோடி முதல் 33 கோடி செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சராசரியாக ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் தயாராகின்றன.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் 99.2% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. 2024ஆம் ஆண்டில் உள்நாட்டின் தயாரிப்பு மதிப்பு ரூ. 4,22,000 கோடியாக உள்ளது. ஏற்றுமதி மதிப்பு ரூ. 1,29,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
2014ஆம் ஆண்டில் 2 தயாரிப்பு மையங்கள் மட்டுமே நாட்டில் இருந்தன. ஆனால், தற்போது நாடு முழுவதும் 300 மையங்கள் செயல்படுகின்றன.
உள்நாட்டு சந்தைகளில் முழு வீச்சில் விற்பனையாகிவரும் நிலையில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் கனிசமாக உயர்ந்துள்ளது. 2014-ல் செல்போன் ஏற்றுமதியே இல்லை; ஆனால் தற்போது ரூ. 1,29,000 கோடிக்கு மேல் தயாரிப்பு மதிப்பு உயர்ந்துள்ளது.
உலகளவிலான தயாரிப்பு மையமாக நாம் மாறியதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பெரும் உதவியாக இருந்தது.
செல்போன் தயாரிப்பு விரிவாக்கமானது வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தோராயமாக 12 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்த வேலைவாய்ப்புகள் பல்வேறு தனிப்பட்ட குடும்பப் பொருளாதார உயர்வுக்கு மட்டுமின்றி, சமூக - பொருளாதார உயர்வுக்கும் வழிவகை செய்துள்ளது'' என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!