மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல; மிகைப்படுத்தப்பட்டது என பாஜக எம்.பி., ஹேம மாலினி விமர்சனம்.
ஹேம மாலினி
ஹேம மாலினிPTI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல என்றும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் பாஜக எம்.பி., ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், ஹேம மாலினி கூறிய இந்தக் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

மௌனி அமாவாசை நாளான ஜன. 29 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே மக்களவையில் இது குறித்துப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினார்.

''மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட ஏன் மறுக்கிறீர்கள். அவை மறைக்கப்பட்டிருக்கிறதா? அழிக்கப்பட்டிருக்கிறதா?

இறந்தவர்களின் உடல்கள் டிராக்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. உ.பி. மாநில அரசு இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது'' என அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பாஜக எம்.பி., ஹேம மாலினி பதிலளித்ததாவது,

’’மகா கும்பமேளாவுக்குச் சென்று புனித நீராடினோம். அனைத்து வசதிகளும் சரியான முறையில் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது உண்மைதான். இது மிகப்பெரிய நிகழ்வு அல்ல. இது எவ்வளவு தீவிரமானது எனத் தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்பட்டுள்ளது. கும்பமேளா சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். ஆனால், எங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்துள்ளோம்’’ எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் உண்மையான பலி எண்ணிக்கையை வெளியிட வேண்டும் எனக் கோருவது குறித்து பதிலளித்த ஹேம மாலினி, ’’அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்வார்கள். தவறாகச் சொல்வதே அவர்கள் வேலை’’ என விமர்சித்தார்.

இதையும் படிக்க | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.