
ஆளும் பாஜக அரசால் நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார். அதில், காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம் என விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சி சுயநலமாகச் செயல்படுவதாகவும், மற்றவர்களை பலவீனப்படுத்துவதால் கூட்டணி கட்சியினரே இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளதாவது,
வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை, மந்தநிலை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தனியார் முதலீடு வீழ்ச்சி மற்றும் தோல்வியடைந்த 'மேக் இன் இந்தியா' பற்றிப் பேசுவதற்கு பதிலாக, காங்கிரஸை மட்டுமே பிரதமர் மோடி குறை கூறினார் .
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கான திட்டங்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, வரலாற்று உண்மைகளைத் திரித்து அவையை தவறாக வழிநடத்த முயன்றார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், ஜமீன்தாரி முறையை ஒழிக்கவும் அரசியலமைப்பில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தத்தின் மூலம், நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பின்னர், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் அம்பேத்கரை வீழ்த்துவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் செய்தது எனப் பிரதமர் பேசியதற்கு பதிவிட்டுள்ள கார்கே,
அம்பேத்கரை மும்பையிலிருந்து அரசியலமைப்பு சபைக்கு அழைத்து வர காங்கிரஸ் தனது உறுப்பினரை அனுப்பியது. நேருவின் அரசாங்கத்தில் நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். தகுந்த மரியாதையுடன் அம்பேத்கர், மாநிலங்களவையை அடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது, மேலும் இதில் அவருக்கு உதவியது எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பாஜகவுக்கு நாட்டின் நலனே முக்கியம்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.