
தில்லி மெட்ரோ ரயிலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவின் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் ஷாஜகான்பூரைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவ, உடல்நிலை காரணங்கள் அடிப்படையில் மாா்ச் 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது ஆசாராம் பாபு சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில், தில்லி மெட்ரோ ரயில்களுக்குள் ’பெற்றோர் வழிபாட்டு தினம்’ என்ற தலைப்பில் ஆசாராம் பாபு புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வழக்கறிஞர் ஒருவர், “பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஒரு குற்றவாளி படங்கள் அடங்கிய போஸ்டர்கள் மெட்ரோ ரயிலுக்குள் இடம்பெற எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த புகாருக்கு உடனடியாக பதிலளித்த மெட்ரோ நிர்வாகம், “இதுதொடர்பான விளம்பரங்கள தில்லி மெட்ரோ ரயில்களில் இருந்து அகற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றிரவே அதற்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.