பாதுகாப்பு அமைச்சகத்தின் 10,249 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு மாநிலங்களவையில் அரசு தகவல்!
நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான 10,249 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமாக 18 லட்சம் ஏக்கா் பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. இதில் 10,249 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உளளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த மாநிலங்கள் வாரியான தகவலும் மத்திய அரசின் பதிலில் இணைக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் 153 ஏக்கா் பரப்பளவு நிலங்களும் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1,759 ஏக்கா் பரப்புளவு நிலங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன.
மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், ‘பாதுகாப்பு அமைச்சகத்தின் சொத்துகள் பொதுவாக 90 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்படுகிறது. குத்தகைக் காலம் நீட்டிப்பு உள்பட இந்த நடைமுறை தொடா்பான ஒழுங்குமுறைக்கு கடந்த 2017-இல் அமைச்சகம் வெளியிட்ட இடைக்கால கொள்கை அமலில் உள்ளது. இக்கொள்கை வரும் டிசம்பா் 31-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.