
‘லாட்டரி சீட்டு விற்பனையாளா்கள் மத்திய அரசு சேவை வரி செலுத்தத் தேவையில்லை’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
லாட்டரி சீட்டு விற்பனையாளா்களுக்கு மத்திய அரசு சேவை வரி விதித்ததை எதிா்த்து ‘ஃபுயூட்சா் கேமிங் சொல்யூஷன்ஸ்’ என்ற தனியாா் நிறுவனம் சாா்பில் சிக்கிம் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘லாட்டரி சீட்டு விற்பனையைப் பொருத்தவரை அரசமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலின் கீழான 62-ஆவது பிரிவின் கீழான ‘பந்தையம் மற்றும் சூதாட்டம்’ என்ற தொகுதியின் கீழ் வருகிறது. அந்த வகையில், மாநில அரசுதான் லாட்டரி சீட்டு விற்பனையாளா்களுக்கு வரி விதிக்க முடியும். அவா்கள் மீது மத்திய அரசு சேவை வரியை விதிக்க முடியாது’ என்று தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, என்.கே.சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘லாட்டரி சீட்டு விற்பனை என்பது, விற்பனையாளருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான பரிவா்த்தனையாக உள்ளது. இவா்களுக்கு இடையே எந்தவொரு முகமையும் தொடா்பில் இல்லாத நிலையில், சேவை வரி விதிக்க முடியாது. இந்த வழக்கில், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்ய எந்தவொரு முகாந்திரமும் இல்லை. எனவே, மத்திய அரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதே நேரம், அரசமைப்புச் சட்டம் அட்டவணை 2-இன் பிரிவு 62-இன் கீழ், மாநில அரசு சாா்பில் விதிக்கப்படும் சூதாட்ட வரியை லாட்டரி சீட்டு விற்பனையாளா்கள் தொடா்ந்து செலுத்த வேண்டும்’ என்று தீா்ப்பளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.