
தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் இழப்பீடாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இதுவரைக்கும் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.
இதனிடையே மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதாலும், சில விரைவு ரயில்கள் வர தாமதமானதாலும் தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் பலர், தில்லி ரயில் நிலைய நடைமேடை 14-ல் காத்திருந்தனர். ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-ல் திரண்டனர்.
இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ரயில் நிலையத்துக்கு தில்லி காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அனுப்பப்பட்டு, கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து ரயில் நிலையத்தில் நெரிசல் சுட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதில் பலர் சிக்கிப் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... கோடிகளால் கட்டமைக்கப்படும் பிம்பங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.