தவறான பிரசாரம்! பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! - யோகி ஆதித்யநாத்
பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கவனம்! தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!!
இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,
"சனாதன தர்மத்திற்கு எதிராக பொய்யான விடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கங்கையும் மகா கும்பமேளாவும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றதுதான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம்.
ஏனெனில் இந்த நிகழ்வு ஒரு கட்சியாலோ அல்லது ஒரு அமைப்பினாலோ ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. இது சமூகத்திற்கானது. அரசு, ஒரு ஊழியராக தனது கடமையை மட்டுமே செய்கிறது. இந்த முறை மகா கும்பமேளாவுக்கு கடமைகளைச் செய்யும் பொறுப்பு, நமக்கு கிடைத்திருக்கிறது. தவறான பிரசாரங்களை விடுத்து கோடிக்கணக்கான மக்கள் நிகழ்வில் பங்கேற்று இதனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.
தற்போது வரை 56 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 7 நாள்கள் விழா நடக்கவிருக்கிறது" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.