புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்ட விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுபோன்ற துயர சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அதிகப்படுத்தக் கோரி தில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், பிப். 15 அன்று புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான விடியோக்களின் 285 இணைப்புகளை எக்ஸ் தளத்திலிருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(பி) இன் கீழ் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் தகவல்களை நேரடியாக நீக்குமாறு உத்தரவிடுவதற்கு ரயில்வே அமைச்சகம் அதன் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநருக்கு (ரயில்வே வாரியம்) அதிகாரம் அளித்து கடந்த டிசம்பர் 24 அன்று ஆணை வழங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுபோன்ற கோரிக்கைகள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரிவு 69ஏ-ன் கீழ் தடுப்புக் குழுவின் மூலம் அனுப்பப்பட்டன.
பலியான நபர்களைக் குறிப்பிடும் தொந்தரவு செய்யக்கூடிய பதிவுகளாக அவற்றைக் குறிப்பிட்டு, பல்வேறு பக்கங்களில் பதிவிடப்பட்ட பதிவுகளை 36 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத விளம்பரங்கள், ஒப்புதல்கள், விளம்பர உள்ளடக்கம் போன்றவை வெளியிடப்பட்ட இணையப் பக்கங்கள், கணக்குகள் போன்றவற்றை அகற்றவும் முடக்கவும் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.