ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டிருப்பது பற்றி..
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவரும் நிலையில், பெட்டிகளை குறைத்துள்ள சம்பவம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் நிற்பதற்குகூட இடமில்லாத காரணத்தால், முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை வாங்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் நின்றுகொண்டும், வழியில் அமர்ந்தும் பயணம் செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாள்களாக பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடமில்லாததால் அதிகளவிலான பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே, முன்பதிவு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிப்பவர்கள் கூட்டத்துக்கு அஞ்சி கதவுகளை மூடிக் கொள்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ரயில்களை சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில், 26 ரயில்களின் (இரு வழித்தடத்தில்) முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு மாற்றாக மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகளை இணைக்கவுள்ளதாக பிப். 15ஆம் தேதி தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இன்றுமுதல் அமலுக்கும் வந்துள்ளது.

சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகள் இன்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை - மைசூரு காவேரி விரைவு ரயில், சென்னை - திருவனந்தபுரம் மெயில், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா அதிவிரைவு ரயில், கொச்சுவேலி - நிலம்பூர் சாலை ராஜ்ய ராணி விரைவு ரயில் மற்றும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில்களின் நான்கு முன்பதிவில்லா பெட்டிகள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் டெக்கான் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில், புதுச்சேரி - மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், விழுப்புரம் - காரக்பூர் அதிவிரைவு ரயில், புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பாலக்காடு விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி - புருலியா அதிவிரைவு ரயில் ஆகிய 8 ரயில்களில் (இரு வழித்தடத்தில் 16) உள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய ரயில்வே கொள்கையின் அடிப்படையில், ஒரு ரயிலுக்கு அதிகபட்சமாக இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைபடி குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக இரவு நேரங்களில் முன்பதிவு பெட்டிகளில் அதிகளவிலான மக்கள் ஏற நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com