கேரளத்தில் அதிர்ச்சி: காதலி உள்பட 5 பேரைக் கொலை செய்த இளைஞர்!

கேரளத்தில் உறவினர்கள் 5 பேரைக் கொலை செய்த இளைஞர் போலீஸில் சரண்.
கொலையில் ஈடுபட்ட இளைஞர் அஃபான்
கொலையில் ஈடுபட்ட இளைஞர் அஃபான்
Published on
Updated on
2 min read

காதலி உள்பட தனது சொந்த குடும்பத்தினர் 6 பேரை கொலை செய்ததாகக் கூறி தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரை கேரளா போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்சாரமூடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஃபான் (23) தனது குடும்பத்தைச் சார்ந்த 6 பேரை கொலை செய்தாகக் கூறி விஷம் அருந்திய நிலையில் நேற்று இரவு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக அஃபானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் சொன்ன இடங்களில் சென்று விசாரித்த போது அவரின் சகோதரன் அஃப்சான் (13), பாட்டி சல்மா பீவி (88), அஃபானின் காதலி ஃபர்சானா (19), அவரது மாமா லத்தீஃப் (69), அத்தை ஷாஹிதா (59) என மொத்தம் 5 பேரை வேறு வேறு இடங்களில் வைத்து கொலை செய்துள்ளார்.

திருவனந்தபுரம் போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது தாயார் ஷெமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்ததில் அஃபானின் தந்தை பல ஆண்டுகளாக துபையில் தொழில் செய்து வருவதாகவும் சில ஆண்டுகளுக்கு முன் அஃபான் துபையில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், கடன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அஃபான் சில நாள்களாக மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும் அவருடைய நடவடிக்கைகள் மாறுபட்டு காணப்பட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஃபர்சானா, லத்தீஃப், ஷாஹிதா, சல்மா பீவி, அஃப்சான்
கொலை செய்யப்பட்ட ஃபர்சானா, லத்தீஃப், ஷாஹிதா, சல்மா பீவி, அஃப்சான்

கொலை செய்யப்பட்ட ஃபர்சானாவின் சகோதரர் பேசுகையில், அவரது குடும்பத்தினர் அஃபானுக்கு ஃபர்சானாவை திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், அஃபானின் வீட்டில் இரு நாள்களுக்கு முன் ஃபர்சானவை அவர் அழைத்துச் சென்றபோது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, நிதி பிரச்னைதான் இந்தக் கொலைகளுக்குக் காரணமா என சந்தேகிக்கும் காவல்துறையினர் அஃபான் போதைக்கு அடிமையானதால் கொலை செய்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஃபானிடம் விசாரணைக் குழு இன்று வாக்குமூலம் பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com